PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM

தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி: டெல்டாவில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் செப்., 1ல் திறக்கப்பட்ட தண்ணீர், கிராமங்களை சென்றடையவில்லை; ஆறு, ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. நேரடி விதைப்பு செய்த நெல் விதைகள் முளைக்காமல் கருகியதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதற்கு, தமிழக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதற்கு, அரசு என்ன செய்யும்... வடகிழக்கு பருவமழையாவது கைகொடுத்து, விவசாயிகளை காப்பாற்றும்னு நம்புவோம்!
வி.சி.க., தலைவர் திருமாவளவன் அறிக்கை: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வீட்டில் நடந்த தேநீர் விருந்தில் பங்கேற்றேன். அக்கூட்டத்தில், ‘ஜனநாயகம் காப்போம் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்த ஆலோசனைகளை, தலைவர்கள் ஒவ்வொருவரும் கூற வேண்டும்’ என, ராகுல் கேட்டுக் கொண்டார். ‘வாரம் ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம் அல்லது நாள்தோறும் ஒரு கட்சியென, பெரிய கட்சிகள் ஒவ்வொரு நாளும் போராட்டத்தை ஒருங்கிணைக்கலாம்’ என, ஆலோசனை வழங்கினேன்.
எல்லாரிடமும் ராகுல் ஆலோசனை கேட்பாரு... ஆனா, போராட்டம் நடத்தும்போது உங்களை எல்லாம் நடுத்தெருவில் விட்டுட்டு, தன் சகோதரி பிரியங்காவுடன் எங்காவது தனியா மறியல்ல இறங்கி, வீண் விளம்பரம் தேடிக்கிடுவார்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு: த.வெ.க., ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவில்லை என கூறுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் அரிசி விலை 30 சதவீதம் உயர்ந்து விட்டது; 1 கிலோ துவரம் பருப்பு விலை, 150 ரூபாயை தாண்டி விட்டது; பூண்டு விலை 250 ரூபாயாக ஏறி விட்டது.
‘எல் – நினோ’ தாக்கத்தால் வறட்சியால் பாதிக்கப்பட்டு, எல்லா மாநிலங்களிலுமே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏறிடுச்சு... என்னமோ, தமிழகத்தில் மட்டும் உயர்ந்துட்ட மாதிரி பேசுறீங்களே!
‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பொதுச்செயலர் கரு.நாகராஜன் பேட்டி:
தண்ணீர் பிரச்னை, நதிநீர் இணைப்பு குறித்து பேச முதல்வர் விஜய் ஆந்திரா சென்றது போல, கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும் செல்ல வேண்டும். முன்பு தி.மு.க., – கம்யூ., கூட்டணி கட்சிகளாக இருந்தபோது, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றி பேசவில்லை. தற்போது த.வெ.க., – காங்., கூட்டணி தானே... எனவே, கேரளாவுக்கு முதல்வர் விஜய் சென்று வர வேண்டும். மேகதாது அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி, கர்நாடகா சென்று முதல்வர் சிவகுமாரை சந்திக்க வேண்டும்.
- த.வெ.க., – காங்., இடையே எப்படியாவது சிண்டு முடிஞ்சு விடப் பார்க்கிறீங்க என்பது நல்லாவே தெரியுது!
