PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் ஹெக்டே பேட்டி: த.வெ.க., அரசு பதவியேற்று, ஐந்து மாதங்கள் தான் ஆகின்றன. பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காங்., கட்சியை, ‘பூத்’ அளவில் பலப்படுத்தும் பணி நடக்கிறது. மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில், பிரதமர் வேட்பாளராக ராகுல் இருப்பார். லோக்சபா தேர்தலின்போது, ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக கூட்டணி சார்பில் அறிவிக்கப்படுவார்.
யாரை வேணும்னாலும் பிரதமர் வேட்பாளரா அறிவிக்கிறது உங்க சுதந்திரம்... ஆனா, ராகுலை ஏத்துக்கிட்டு மக்கள் ஓட்டு போடுவாங்களா என்பது தான், ‘மில்லியன் டாலர்’ கேள்வி!
தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: அரிசி, பால், பருப்பு விலை, பஸ் கட்டணம் என, சகலத்தின் விலைகளும் சரமாரியாக உயர்வு. இவற்றோடு சொத்து வரி, மின் கட்டணம், போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம் – ஒழுங்கு சீரழிவு என நித்தம் நித்தம் அவதிப்படும் தமிழக மக்கள், அரசியலில் செய்த கடைசி பிழையாக விஜய் இருப்பார்.
ஆம், ‘விசில்’ ஊதியவர்களே, விசிலை விரைவில் ஊதித் தள்ளுவர்; அதற்கான நேரம் தொடங்கியாச்சு.
விஜய் போகும் இடமெல்லாம் முண்டியடிக்கும் கூட்டத்தைப் பார்த்தால், நீங்க சொல்றது எல்லாம் தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு தான் நடக்கும் போல தெரியுது!
ஆந்திர மாநிலம், கர்னுால் தொகுதி காங்., – எம்.பி., மல்லுரவி பேட்டி: தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த நக்சல்கள் பலரும், ஆயுதங்களை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்புவதாக, பா.ஜ., தரப்பில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், ஒரு சில நக்சல் அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே ஆயுத போராட்டத்தை கைவிட்டு, அரசிடம் சரண் அடைந்து வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
நக்சல்களுக்கான நிதி, ஆயுதங்கள், பழங்குடியினர் ஆதரவுன்னு எல்லா மடைகளையும் பா.ஜ., அரசு அடைச்சது தான், அவங்க சரணடைய காரணம்!
காங்., தமிழக மூத்த தலைவர் தங்கபாலு பேட்டி:
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில், நவ., 1ல் டில்லியில் பேரணி நடக்க உள்ளது. அதன் மூலம் ஓட்டு திருட்டு தொடர்பான பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்வோம். வாக்காளர் பட்டியல் திருத்தங்களில் முறைகேடு நடந்துள்ளதால், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்.
- சீக்கிரமே தீபாவளி பண்டிகை வர இருக்கு... மக்களும், வர்த்தகர்களும் ஓடியாடி உழைச்சிட்டு இருக்காங்க... நீங்களோ வெட்டி போராட்டங்களை நடத்தி, அவங்க பிழைப்பில் மண் அள்ளி போட பார்க்கிறீங்களே!
