PUBLISHED ON : ஜன 01, 2024 12:00 AM

தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவிலில், முன்னாள் நகராட்சி தலைவரான, தி.மு.க., செயற்குழு
உறுப்பினர் ஸ்ரீதர், கோவிலில் பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டரை
கன்னத்தில் அடித்தது, வன்முறை வெறியாட்டத்தின் உச்சகட்டம். பா.ஜ.,வினரின்
சாதாரண முகநுால் பதிவுகளுக்கே, நட்டநடுநிசியில் வீடு புகுந்து கைது
செய்யும் காவல் துறை, இதுவரை ஸ்ரீதரை கைது செய்யாமல் இருப்பது, காவல்
துறையை பலவீனமாக்கும் என்பதை உணர வேண்டும்.
சரியா போச்சு... ரொம்ப
அழுத்தம் கொடுத்தால், அறை வாங்கியதோடு இல்லாமல், அந்த பெண் இன்ஸ்பெக்டரை
தான் தண்ணி இல்லா காட்டுக்கு மாத்துவாங்க!
தமிழக, காங்., பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணை தலைவர் ரவிராஜ் பேச்சு: தமிழக, காங்.,கில், கட்சி உள்கட்டமைப்பை பலப்படுத்தாமல் கட்சியை வளர்க்க முடியாது. கோஷ்டி பூசலுக்கு பெயர் போன தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு, தலைவர் பொறுப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி, மூத்த தலைவர்களை சமாளித்து கட்சியை திறம்பட நடத்தி, ஆட்சியை பிடித்து உள்ளார்.
அவரை போல, கார்த்தி சிதம்பரத்திற்கும், தமிழக, காங்., தலைவர் பதவி வழங்கினால், கோஷ்டி தலைவர்களை அரவணைத்து, காமராஜர் ஆட்சி அமைக்க பாடுபடுவார்.
இப்படி எல்லாம் பேசி, லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., தரப்போற ஒற்றை இலக்க தொகுதிகளுக்கும் வேட்டு வச்சிடாதீங்க!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். ஓட்டேரி அரசு பள்ளி எதிரே உள்ள, 'மெடிக்கல் ஸ்டோர்' உரிமையாளர் வினோத்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.
வணிகர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டும் ரவுடி கும்பல்களின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. வணிகர் களை பாதுகாக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அடிக்கடி போலீசாரின் துப்பாக்கி சத்தம் கேட்கும் போதே, இப்படி அராஜகங்கள் நடக்குதே... இது எங்க போய் முடியுமோ?
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த, தமிழக அரசு ஏன் மறுக்கிறது? அதை செய்ய மறுத்தால், லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற, பிப்., 28ல், கடலுாரில் மாநாடு நடக்க உள்ளது. அது போல, வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ஏன் வழங்க மறுக்கிறது?
அரசை எதிர்த்து கேள்வி கேட்கிறாரே... பா.ம.க., உள்ளே வந்தால், கூட்டணியில் இருந்து வெளியே போயிடலாம்னு முடிவு செஞ்சிட்டாரா?