PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க., இடம் பெறும். லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க பிரசாரத்திற்கு செல்ல இருப்பதால், நான் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று, தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின் முடிவு செய்யப்படும். எதுக்கு வெட்டி செலவுன்னு இவர் யோசிக்கிறார்... இருந்தாலும், 'தப்பிக்கவா பார்க்குறீங்க'ன்னு கட்சி நிர்வாகிகள், இவரை களத்துல இழுத்து விடாம இருந்தா சரிதான்!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேட்டி: சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக முதலீடுகளை ஈர்க்கும் இடமாக கோவை மாறி வருகிறது. கோவை மாநகரில் குப்பை சரியாக அகற்றாதது மிகப்பெரும் குறையாக உள்ளது. மாநகராட்சி மேயர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சியை புறந்தள்ளிட்டு, தன் கட்சி தொண்டர்களுடன் இவங்க களத்தில் இறங்கி குப்பையை அகற்றினால், கோவை லோக்சபா தொகுதியை வசப்படுத்தி விடலாமே!
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி: தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், சாகுபடி துவங்கும் முன், 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதை பின்பற்றி தமிழக அரசும், பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி, சாகுபடிக்கு உதவ வேண்டும்.சாகுபடி துவங்கும் முன், 'டிபாசிட்' வசூலிக்க சொன்னா உடனே செய்வாங்க... இப்ப இருக்கும் நிதி நெருக்கடியில் ஊக்கத்தொகை தருவாங்களா என்ன?
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: நாடு தழுவிய அளவில், 'ஆன்லைன்' வணிகம் எங்களை பாதிக்கிறது. வணிகத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை ஆட்சியாளர் கள் சட்டமாக்க வேண்டும்.வணிகர்களின் கோரிக்கையை, எம்.எல்.ஏ.,வான இவரது மகன் பிரபாகர் ராஜா எத்தனை முறை சட்டசபையில் பேசி இருக்கார்னு சொல்ல முடியுமா?