PUBLISHED ON : பிப் 03, 2024 12:00 AM

தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பேட்டி:
திருவாரூர்
மாவட்டத்தில், தமிழக கவர்னர் ரவி பயணம் மேற்கொண்ட போது, 'பிரதம மந்திரி
வீடு கட்டும் திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை' என்று கூறி
இருக்கிறார்; இது முற்றிலும் தவறானது. அவர் அப்படி கூறியிருப்பது
வருத்தம் அளிக்கிறது.
ஒரு கவர்னரே இப்படி, 'ஓப்பன் ஸ்டேட்மென்ட்'
தர்றப்ப, பொது கணக்கு குழு நேரடி கள ஆய்வு செஞ்சு தப்பை கண்டுபிடிக்காம,
இப்படி தமிழக அரசுக்கு தாளம் தட்டலாமா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'இண்டியா' கூட்டணியில் ஹிந்தி பேச வேண்டும் என நிதீஷ்குமார் கூறியபோது, 'கூட்டணிக்காக அமைதி காத்தோம்' என, டி.ஆர்.பாலு கூறியுள்ளார். அதாவது, கூட்டணிக்காக, அரசியலுக்காக, ஹிந்தியை ஏற்று, தமிழை விட்டுக் கொடுத்தது தி.மு.க., என்று சொல்கிறீர்களா?
கூட்டணி, பதவிக்காக தேவைப் படுற இடத்துல தயங்காம விட்டுக் கொடுத்து போறது அரசியல்ல வழக்கம் தானே!
முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா அறிக்கை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் ஈரப்பதம், 17 சதவீதம் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை, 22 சதவீதம் அளவுக்கு உயர்த்தி தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசிடம் வலியுறுத்தி, தி.மு.க., அரசு இதை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், உடனடியாக திறந்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதலை தாமதமின்றி செய்ய வேண்டும்.
தி.மு.க., கேட்டா தர மாட்டாங்க... இப்போதைக்கு பன்னீர்செல்வம், தினகரன், ஏன்... நீங்க கேட்டா கூட கிடைக்க வாய்ப்புண்டு!
ஐக்கிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் பேட்டி: காவிரி டெல்டா மாவட்டங்களில், 10 லட்சம் ஏக்கர் பயிர்கள், உயிர் தண்ணீர் இல்லாமல் கருகுவதை பார்த்து விவசாயிகள் மனம் உடைந்துள்ளனர். ஆலைகள், தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, குடிநீர் ஆதாரம் என்று கூறி மேட்டூர் அணையில் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரை திறந்து விட்டு, பயிர்களை காப்பாற்ற வேண்டும். இல்லா விட்டால், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக களம் இறங்குவோம்.
ஒரு பக்கம் கள் இயக்கம்; இன்னொரு பக்கம் விவசாயிகள் சங்கம்... லோக்சபா தேர்தலில், தி.மு.க., வுக்கு எதிரிகள் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதே!

