PUBLISHED ON : பிப் 06, 2024 12:00 AM

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா பேச்சு: தமிழகம், கேரளம்,
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்த்து தான் திராவிடம் என்கிறோம்.
அப்படியிருக்கும் போது, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தி.மு.க.,வினர்
தடுக்க வேண்டியது தானே. தமிழர்களும், கர்நாடகத்தினரும் திராவிடர் தான் என,
சொல்லி தடுக்கலாம். அதை விட்டு பிரதமர் மோடி தான் தடுக்க வேண்டும் என
சொல்கின்றனர்.
'நாங்களும் திராவிடர் தானே... கொஞ்சம் அணையை
கட்டிக்கிறோம்'னு பதிலுக்கு கர்நாடகா சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பிரதமரை
தடுக்க சொல்றாங்களோ என்னமோ?
தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை: மத்திய அரசின் பட்ஜெட்டில், 'இதுவரை 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகள் அமைத்துள்ளோம்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமையாக பேசி உள்ளார். அதே சமயம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
வசதியா போச்சு விடுங்க... லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு புதுசா ஒரு செங்கல்லை எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தானே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமிக்கு மூன்று மாதத்திற்கு ஒரு தீர்ப்பு என, ஒரு டஜன் தீர்ப்புகள், தொடர்ந்து அவருக்கு சாதகமாக கிடைத்துள்ளன. அவர் மீதான வழக்குகள் மட்டும், ஆமை வேகத்தில் நகர்கின்றன. கூடவே, 'அவர் குறித்து பேசாதே' என, அவரை விமர்சிப்பவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு போடுகிறது. பழனிசாமிக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்புகளும், அதன் பின்னணிகளையும் ஆராய்ந்து மறு விசாரணை செய்யப்பட வேண்டும்.
பழனிசாமி மேல இருக்கிற கடுப்புல, நீதிமன்றங்களை சந்தேகப்படுற மாதிரி அறிக்கை விட்டு இவரு மாட்டிக்க போறாரு!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ஈழ தமிழர்களுக்கு பயிற்சி அளித்து, ஆயுத குழுவாக வளர்த்தது காங்கிரஸ் தான்' என, திருமாவளவன் கூறியுள்ளார். போகிற போக்கை பார்த்தால், அந்த குழுவை வைத்து, ராஜிவை படுகொலை செய்ய சொன்னதும் காங்கிரஸ் தான் என, சொல்வாரோ? காங்கிரஸ் கட்சியினருக்கு சூடு, சொரணை இருந்தால், திருமா வளவனை கூட்டணியை விட்டு வெளியேற்ற தி.மு.க.,வை வற்புறுத்தும்; ஆனால், இவை எதுவுமே இல்லை. என்ன செய்வது?
தேர்தல் முடியும் வரை சூடு, சொரணையை ஓரங்கட்டி வச்சிடுவாங்க!