PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: அமலாக்கத்துறை எந்த
நேரத்தில் வந்தாலும், அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். காபி விருந்து
கொடுத்து வரவேற்கவும் தயாராக உள்ளோம். எங்களுக்கு மடியில் கனமில்லை;
வழியில் பயமில்லை.
அமலாக்கத் துறை ஒரு அழையா விருந்தாளி; அழைத்தால் வர மாட்டாங்கன்னு நினைத்து, துரைமுருகனும், ரகுபதியும் கூவி, கூவி அழைக்கிறாங்களோ?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: உலகிலேயே மிகப்பெரிய தாமிர உற்பத்தி ஆலை, குஜராத்தின் முந்த்ரா நகரில் அதானி குழுமத்தால் கட்டப்படுகிறது. குஜராத்தில் தொடர்ந்து, பல்வேறு தொழில்கள் துவங்கப்படும் நிலையில், அம்மாநிலத்தின் பொருளாதாரம் மிக உயர்ந்த நிலைக்கு செல்லும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை விட, வெகு பின்னே இருந்த குஜராத், தமிழகத்தை எட்டிப் பிடித்து முன்னேறி செல்லும் நாள் வெகு துாரத்தில் இல்லை. இதை, திராவிட மாடல் ஆட்சி என, மார்தட்டி கொள்வோர் உணர வேண்டும்.
அதை பற்றி எல்லாம் பேச மாட்டாங்க... 'அதானி, மோடியின் நண்பர்; அதான் குஜராத்தில் தொழில் நடத்துறார்'னு வேணும்னா பேசுவாங்க பாருங்க!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: மூன்றாம் இடத்தில் இருப்பதாக நம்பும் கட்சி, இரண்டாம் இடத்தை தாண்டி முதலிடத்திற்கு முயற்சிக்க கணக்கு போடுவதற்கும், ஆட்சியில் இருக்கும் கட்சி, தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என உறுதிபட நம்புவதற்கும், புதிய கட்சியை துவக்கி, ஆட்சிக்கு வர முடியும் என அரசியல் முனைவோர் ஆசைப்படுவதற்கும், இப்படி கற்பனை றெக்கை கட்டி பலரும் பறக்க, பழனிசாமி அரசியலே காரணம்.
இப்படி எல்லாரையும் கற்பனை உலகில் பறக்க விட்ட பழனிசாமி, ஒரு அரசியல் மேதைன்னு சொல்ல வர்றாரோ?
காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் அறிக்கை: காவிரிக்காக உச்ச நீதிமன்றம் சென்று, உரிமையை நிலை நாட்டிய காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஓரணியில் திரள வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், காவிரி நீரை பெற்றுத்தர சபதம் எடுக்கும் கட்சிக்கே விவசாயிகள், மக்கள் ஆதரவு என்ற முடிவை எடுக்க வேண்டும்.
நம்ம அரசியல்வாதிகளுக்கு சபதம் போடுறதெல்லாம் சர்க்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரின்னு தெரியாத அப்பாவியா இருக்காரே!

