PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி: லோக்சபா
தேர்தல், மிக முக்கிய கால கட்டத்தில் நடக்கிறது. வலுவான கூட்டணி என்பது
எண்ணிக்கையிலும், வெற்றிக்கான முகாந்திரமும் கொண்டதாகும். மாநில மக்கள்
நலன் கருதி, அத்தகைய கூட்டணியில் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இணைய
முடிவெடுக்கப்படும். நாங்கள் மூன்று தொகுதிகள் கேட்போம். இம்முறை நாங்கள்
லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் இடம் பெற வேண்டும்.
முதல்ல, அ.தி.மு.க., - பா.ஜ., இரண்டில் எது வலுவான கூட்டணி என்பதை கண்டுபிடிப்பதில், டாக்டர் வெற்றி பெறுவாரான்னு பார்ப்போம்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழகம் விற்கும்வாகனத்திற்கு, ஒரு ரூபாய் க்கு, 28 பைசா வரி செலுத்தப்படுகிறது. உத்தர பிரதேசம் விற்கும் அரிசி, கோதுமை போன்ற விவசாய பொருட்களுக்கு, ஒரு பைசா கூட வரி இல்லை. அதாவது தமிழகத்தில் தயாரிக்கப்படும் காரை, உத்தர பிரதேசத்தில் வாங்குவோர் வரி செலுத்துகின்றனர். ஆனால், அங்கு உற்பத்தியாகும் விளை பொருளுக்கு, தமிழகத்தில் உள்ள ஒருவர் வரி செலுத்து வதில்லை. இது அநீதியா, நீதியா?
கார் ஆடம்பரப் பொருள்... அதுவும், அரிசி, பருப்பும் ஒன்றா... இரண்டையும் ஒப்பிட்டு நீதி, அநீதியை தீர்மானிக்க முடியுமா?
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி: தி.மு.க., முன்பு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மக்கள், அ.தி.மு.க.,வையும்,பழனிசாமியையும் நம்புகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க., வெளியிடுவது நம்பியார் அறிக்கை; அ.தி.மு.க., வெளியிடுவது தான் எம்.ஜி.ஆர்., அறிக்கை.
இப்படி பேசிட்டு, கடைசியில் தேர்தல் அறிக்கையை காமெடியா, நாகேஷ் அறிக்கை மாதிரி ஆக்கிடாம இருந்தால் சரி!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசின் 243 அரசாணையால், இடைநிலை ஆசிரியர்கள், துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. அரசாணையால், சொந்த ஒன்றியத்தில் பணியாற்றியவர்கள், கடைக்கோடி மாவட்டத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது சமூக அநீதி; ஆசிரியர்களுக்கு செய்யும் துரோகம்.
இதை எல்லாம் மனசுல வச்சு, லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சியை ஆசிரியர்கள் பழி தீர்த்துடுவாங்கன்னு தான் தோணுது!