PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை:
உலகின்
மிகப்பெரும் ஜனநாயகத்தின் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன், அகில இந்திய
காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை
முடக்கிய நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நடவடிக்கை, ஜனநாயக
முறையில் தேர்தலை சந்திக்க பயப்படும், பா.ஜ.,வின் அச்சத்தை அப்பட்டமாக
வெளிக்காட்டுகிறது.
வருமான வரி கணக்குகளை தாமதமா தாக்கல் செஞ்சது
தானே, காங்., கணக்குகளை முடக்க காரணம்... அப்ப, 'அவங்கவங்க இஷ்டத்துக்கு
எப்ப வேணும்னாலும் தாக்கல் செய்யலாம்'னு இவங்க சொல்றாங்களா?
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலம் மற்றும் தேசிய கட்சிகள், தேர்தலுக்கு முன், 'வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்' என, வாக்குறுதி கொடுப்பதும், தேர்தல் முடிந்தவுடன், அதை மறுப்பதுமே இந்திய அரசியல் கட்சிகளின் வாடிக்கையாக இருக்கிறது. 'பேச வாருங்கள், பேச வாருங்கள்' என, அழைத்துக் கொண்டே, டில்லி விவசாயிகள் மீது ஒடுக்கு முறையை ஏவக்கூடாது.
மத்திய அரசை இடிக்கிற மாதிரி இருக்கே... அ.தி.மு.க.,வுடன் அணி சேரலாம்னு டாக்டர் ஒருமனதா முடிவு செஞ்சிட்டாரோ?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: மேகதாது அணை திட்டம் குறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், 'நமது நீர், நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம்' என, பேசியிருக்கிறார். மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முனைந்திருப்பதும், திட்டத்தை செயல்படுத்த குழுக்களை அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டிருப்பதும் கண்டனத்துக்குரியது.
காங்கிரசுடன் தானே கூட்டணியில் இருக்கீங்க... அப்படியே, ராகுலுக்கு ஒரு போன் போட்டு சொல்லலாமே!
இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது அறிக்கை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் போராடிய போது, விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதே, மீண்டும் விவசாயிகள் போராட காரணமாகியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை என்ற, விவசாயிகள் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன் வர வேண்டும்.
அது தான் உண்மையான காரணமா இல்ல, தேர்தல் நேரத்துல மத்திய அரசுக்கு எதிரா விவசாயிகளை யாராவது துாண்டி விடுறாங்களா?

