PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி: பா.ஜ., மாநில
தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியலில் ஒரு காமெடியனாக மாறி விட்டார். வட
மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. பா.ஜ.,வுக்கு சவாலே
தென் மாநிலங்கள் தான். லோக்சபா தேர்தலில், எங்களுக்கு ஒரு தொகுதி வழங்க
வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு அறவே பிடிக்காத அண்ணாமலையை கலாய்த்தால், லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியை தி.மு.க., தந்துடும்னு நினைக்கிறாரோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் உண்டு.
பொதுவாக, வெடி விபத்துகள் மருந்து கலவை மேற்கொள்ளும் இடத்தில் நடக்கிறது. தகுதியானோரின் கண்காணிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மருந்து கலவை பணி நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.
தொடர்ந்து, பத்தாண்டு ஆட்சியில் இருந்தீங்களே... அப்ப, பட்டாசு தொழிலாளர்கள்பாதுகாப்புக்கு ஏதாச்சும் செஞ்சிருக்கலாமே!
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேச்சு: நம்மை பா.ஜ., அரசு மிரட்டி பார்க்கிறது. நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக சொன்ன, 1,000 ரூபாயை கொடுத்து விட்டோம். பா.ஜ., தருவதாக சொன்ன, 15 லட்சம்ரூபாய் எங்கே என, தைரியமாக கேளுங்கள்.
லோக்சபா தேர்தலில், 200 இடங்களை கூட அக்கட்சி தாண்டாது என, தி.மு.க., கணித்து உள்ளது.
எப்படி...? 2019 லோக்சபா தேர்தலில் ராகுல் தான் பிரதமர்னு இவங்க தலைவர் கணித்து, முதல் ஆளா அறிவிச்சாரே... அந்த மாதிரி ஆகிட போகுது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு, ஐந்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயம், வன்னியர் இனம். அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர், உறுப்பினராக நியமிக்க தகுதியான பலர், அச்சமுதாயத்தில் உள்ள நிலையில், அவர்களை புறக்கணிப்பது தான் சமூக நீதியா?
குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பதவி தருவது தான், சமூக நீதின்னு டாக்டர் நினைக்கிறாரோ?