PUBLISHED ON : பிப் 26, 2024 12:00 AM

தமிழக, காங்., முன்னாள் தலைவர் அழகிரி பேச்சு:
நான்
தலைவராகும் போது, ஒரு சாவியை கொடுத்து பொறுப்பை ஒப்படைத்தனர். இன்றைக்கு
ஒரு பெரிய சாவி கொத்தையே, செல்வப்பெருந்தகையிடம் கொடுத்துள்ளேன். நான்
தேவையான அளவு மட்டுமல்ல, தேவைக்கு அதிகமாகவும் தலைவராக இருந்து விட்டேன்.
ஒன்றை பெறுவதில் எவ்வளவு மகிழ்ச்சி உள்ளதோ, அதே மகிழ்ச்சி அதைதுறப்பதிலும்
உள்ளது.
வார்த்தையில் பெருந்தன்மையும், உள்ளத்தில் மனக்குமுறலும் இவரது பேச்சில் தெளிவா தெரியுதே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: காலம் காலமாக, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வந்த அருந்ததியர், முக்குலத்தோர், பிராமணர் போன்ற பல சமூகங்களின் ஓட்டுகள் முற்றிலுமாக, இரட்டை இலையை விட்டு, இடம் பெயரும் சூழ்நிலையை, பழனிசாமியின் அரசியல் உருவாக்கி இருக்கிறது. இதன் விளைவு, ஓட்டு எண்ணிக்கை யின் போது புரியும். தேர் முறிந்த பின், தெய்வம் வந்து லாபம் இல்லை; தேர்தல் முடிந்த பின், தெளிவு வந்து பிரயோஜனம் இல்லை.
இவங்க தலைவர் பன்னீர்செல்வத்துக்காக, முக்குலத்தோர் ஓட்டு போடுவாங்கன்னா, கடந்த சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்கள் கைகொடுத்து, பழனிசாமி ஆட்சியை தக்க வச்சிருப்பாரே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க சென்ற, 18 பெண்கள் உள்ளிட்ட, 20 விவசாயிகளை காவல் துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து, 10 விவசாயிகள் செய்யாறு, மேல்மா கூட்டு சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்; அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமது அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதை, முதல்வர் ஸ்டாலின் சொல்லாமல் சொல்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
டில்லிக்கு போராட போற விவசாயிகளுக்கு ஆதரவு தர்றாங்க... ஆனா, தன்னை சந்திக்க வருபவர்களுக்கு, 'தடா' போடுறாங்களே ஏன்?
தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: வட சென்னை முன்னேறியது என, தி.மு.க., அரசு சொல்லுமானால், முதல்வர் தன் வீட்டை, சித்தரஞ்சன் சாலையில் இருந்து, கொளத்துார் தொகுதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து கோட்டைக்கு வந்து பார்த்தால், வட சென்னை மக்களின் வலி புரியும்.
முதல்வர் கொளத்துார் தொகுதிக்கு வீட்டை மாற்றினால், 'ஓவர் நைட்'டில் எல்லா பிரச்னைகளையும் அதிகாரிகள் தீர்த்துடுவாங்க; எந்த வலியும் அந்த பகுதி மக்களுக்கு இருக்காது!

