PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
ஓடைகளை,
வாய்க்கால்களை, கால்வாய்களை, தண்ணீர் தந்து வாழ்வளிக்கும் ஒரு ஜீவநதி, அதே
வாய்க்கால்கள், ஓடைகள், கால்வாய்களிடம் கையேந்தி நின்றால், எப்படி
பரிதாபமாக இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது, கடல் போன்ற இயக்கங்கள்,
குளம், குட்டைகளின் வாசல் தேடிச் சென்று, கூட்டுக்கு வருந்தி அழைக்கிற
வருத்தமான நிகழ்வுகளும்.
'மணி பிரதர்ஸ்' கூட்டணி கட்சி தலைவர்களை தேடித் தேடி போய் பார்க்கிறதை தானே சொல்றீங்க... ஜெ., ஆன்மா இவங்களை மன்னிக்குமா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் 245 சிவில் நீதிபதிகள் தேர்வில், அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள், பொது பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது உறுதியானதை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தயாரித்த தற்காலிக தேர்வுப் பட்டியலை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிபதிகள் தேர்வு மட்டுமல்ல, 2019ல் நடந்த 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விலும் இட ஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படவில்லை.
இட ஒதுக்கீடு வாங்குறதுக்கு, அரசிடம் எவ்வளவு போராட வேண்டி இருக்கு... இப்படி எல்லாம் செஞ்சா எப்படி ஆபீசர்ஸ்?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கடந்த 2022 - 23ல், மஹாராஷ்டிரா 29, கர்நாடகா 24, குஜராத் 17, டில்லி 13 சதவீதம் அந்நிய நேரடி முதலீடுகளை பெற்ற நிலையில், தமிழகம் 5 சதவீதம் மட்டுமே பெற்றுஉள்ளது. இது, இந்த ஆண்டு மேலும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடத்தில் இருக்கிறோம் என பெருமை பேசிக் கொண்டு, முதலீடுகளை தி.மு.க., அரசு கோட்டை விட்டுக் கொண்டுஇருக்கிறது.
ஓட்டு போடுற பாமர மக்களுக்கு இந்த சதவீதமும், முதலீடு குறித்த புள்ளிவிபரமும் புரியவா போகுது?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர், உதவி பிரிவு அலுவலர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2022 டிசம்பர் 18ல் நடந்தது. ஆனால், 15 மாதங்களாகியும் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், தலைமை செயலக பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடுமையான மன உளைச்சல் அடைந்துஉள்ளனர்.
அடுத்தவங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துறதுல, அரசு அதிகாரிகள் ஒவ்வொருவரும் முனைவர் பட்டமே வாங்கிடுவாங்க போலிருக்கு!

