PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: வரும் தேர்தலை
எதிர்கொள்ள என் தந்தையின் தயவு, இன்னும் எனக்கு தேவைப்படுகிறது. அதே
வேளையில், கட்சி பலம், கூட்டணி பலம் தான் முக்கியம், எம்.பி., -
எம்.எல்.ஏ., பெயர்களை விட, கட்சியின் சின்னம் தான் மக்களுக்கு தெரியும்.
இண்டியா கூட்டணியில் எந்த வித குழப்பமும் இல்லை. கட்சி பலத்தையும்,
கூட்டணி பலத்தையும் நம்பி தேர்தலை எதிர் கொள்கிறேன்.
ஆக, 'அஞ்சு
வருஷமா சிவகங்கை தொகுதிக்கு ஒண்ணும் பண்ணல... என் முகத்தை பார்த்து மக்கள்
ஓட்டு போட மாட்டாங்க'ன்னு இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டாரே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக காவல் துறையில் எஸ்.ஐ., நிலையில் துவங்கி கூடுதல் எஸ்.பி., நிலை வரை அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். இது கண்டனத்திற்குரியது.
'நீங்கள் நலமா' திட்டத்தில், அந்த 400 பேரிடமும் முதல்வர் போன் போட்டு பேசினால் நல்லா இருக்குமே!
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், இங்குள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது மக்கள் நலனை அறிய, 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்து, மக்களுடன் நேரடியாகபேசுகிறார்.
உண்மையில், நீங்கள் நலமா திட்டத்துல, முன்கூட்டியே யாரையும் தேர்வு செய்யாமல், ரேண்டமா நம்பர் எடுத்து முதல்வரை பேச வச்சு, 'சென்சார்' செய்யாமல் அந்த உரையாடலை வெளியிடுவீங்களா?
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு: அமைச்சர் பெரியசாமியை திண்டுக்கல் மக்கள் செல்லமாக ஐ.பி., என்று தான் அழைக்கின்றனர். ஐ.பி., என்ற வார்த்தை என்னை பொறுத்தவரை பெரியசாமி என நினைவுக்கு வரவில்லை. 'இன்டலிஜென்ட் பெர்சன்' என்பதன் சுருக்கமான ஐ.பி.,யாகவே எனக்கு தெரிகிறது.
உண்மை தான்... 'இன்டெலி ஜென்ட்' ஆக அவர் இருந்ததால தான், 'டம்மி'யான கூட்டுறவு துறையை கை கழுவிட்டு, 'வெயிட்' ஆன ஊரக வளர்ச்சி துறைக்கு மாறினார்!

