PUBLISHED ON : மார் 11, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
லோக்சபா தேர்தல்
விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு, கடந்த காலங்களை போல
காலம் தாழ்த்தாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை, உடனடியாக வெளியிட
வேண்டும். அரசு ஊழியர்களை அழைத்து பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை
நிறைவேற்ற முன்வர வேண்டும்.
நிதி நெருக்கடியில் எப்படியும் முதல்வர் செய்ய மாட்டார்னு நம்பிக்கையில், அரசு ஊழியர்களை வளைக்க தான் இப்படி எல்லாம் பேசுறாரோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: உங்களுக்கு கட்சி இருக்கா; சின்னம் இருக்கா; கூட்டணி இருக்கா என்கின்றனர். இதற்கெல்லாம் ஒரே பதில், தர்மத்தின் பக்கம் நிற்கிறோம் என்ற பெருமிதம் இருக்கு... பணத்துக்கும், பதவிக்கும், தன்மானம் இழக்கவில்லை என்ற பெருமை இருக்கு.
'நாடு இருக்கா; நகரம் இருக்கா...' என்று, பாண்டவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அன்று, பாரதப்போர் தந்த பதிலை, இப்போது நடக்க இருக்கும் பாரதப்போர் தரும் என்ற, சத்தியத்தின் மீது நம்பிக்கை இருக்கு.
இப்ப வர்ற படங்கள்ல கூட, இந்த மாதிரி யாரும் வசனம் எழுத மாட்டேங்கிறாங்க... இவர் வேற லெவல்!
தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாபர் சாதிக்கை, கட்சியை விட்டு நீக்கிய கையோடு, நம் கடமை முடிந்து விட்டது என, கண்டும், காணாமல் முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த நபருடன் நெருக்கமாக இருந்து பயனடைந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தண்டிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், முதல்வருக்கு உள்ளது என்பதை உணர்ந்து, அவர் செயல்பட வேண்டும்.
தன் கையால, தன் கண்ணையே குத்திக்கணும்னு இவர் சொல்றதை முதல்வர் கேட்பாரா என்ன?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: உலகம் எங்குமே, பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களை விட பெண்களுக்கு தான் போர்க்குணம் அதிகம். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டு கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான்.
உண்மை தான்... அப்படியே, பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், லோக்சபா தேர்தலில் இவங்க கட்சி, 50 சதவீதம் சீட்டை பெண்களுக்கு ஒதுக்குமா?

