PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பேச்சு: என் பெற்றோர்
எனக்கு வைத்த பச்ச முத்து என்ற பெயரில், 2014 லோக்சபா தேர்தலில்,
பெரம்பலுார் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டேன். அப்போது, என்னை
தோற்கடிக்க வேண்டும் என, பச்சமுத்து என்ற பெயரில் உள்ளவர்களை இங்கு
போட்டியிட வைத்தனர். எந்த பச்சமுத்து என தெரியாமல் மக்கள் குழம்பி, வேறு
பச்சமுத்துவுக்கு ஓட்டு போட்டதால் தான் தோற்றேன்.
அட பாவமே...
கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிராக கூட ரெண்டு கட்சியினரும் இப்படி சதி
செஞ்சிருக்காங்க... அதைக்கூட சமாளிக்க தெரியாத அப்பாவியா இருந்திருக்காரே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'கடந்த 2016ல் ஸ்டாலின் சொல்லிதான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். எங்கள் பிழைப்புக்காக மக்கள் நல கூட்டணியை அமைத்தோம்' என, திருமாவளவன் கூறியுள்ளார். ஓட்டுக்காக, அது தரும் புகழுக்காக, பதவி சுகத்துக்காக, கூட்டணியில் இருப்பதும், வெளியேறு வதும், கொள்கைகளை மறந்து அல்லது துறந்து மக்களை முட்டாள்களாக, துச்சமாக எண்ணும் அரசியல் வாதிகளின் போலி முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருமாவளவன் மட்டுமா... ராமதாஸ், வைகோன்னு இந்த மாதிரி, 'கொள்கை' அரசியல் கொண்டவர்களின் பட்டியல் தமிழகத்தில் ரொம்ப அதிகம்!
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈஸ்வரன் பேட்டி: இந்தியாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரே கருத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறோம். 'இண்டியா' கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை, தேர்தல் முடிந்த பின் முடிவு செய்வோம்.
'இண்டியா' கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் சூழல் வரவே வராதுன்னு தானே எல்லா கருத்து கணிப்புகளும் சொல்கின்றன!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: சட்டசபை தேர்தலில், பண பலம், ஆட்சி அதிகாரம், கூட்டணி கட்சி பலம் இருந்தும், முறைகேடு மற்றும் ஊழல்களால் அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது. பழனிசாமி செய்த தவறுக்கு மக்கள் தண்டனை தருவர். அ.தி.மு.க., தொண்டர்கள் ஒருங்கிணைவர். பழனிசாமி வீழ்ச்சிக்கு பின், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் ஆட்சி தமிழகத்தில் மலரும்.
பழனிசாமியின் எதிரிகள் வெளியே இருந்தால் பரவாயில்லை... அவரை வீழ்த்த நினைத்து, அந்த கட்சியை இவரும், பன்னீரும் ரவுண்டு கட்டி அழிக்க நினைக்கின்றனர்... இவர்களை எப்படி தொண்டர்கள் நம்புவர்?

