PUBLISHED ON : மார் 25, 2025 12:00 AM

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் அறிக்கை: பொருளாதாரத்தில்
நலிவடைந்த பிரிவினருக்கான வருமான வரம்பை, 8 லட்சம் ரூபாயாக மத்திய அரசு
உயர்த்தியது. எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு கல்வி
உதவித்தொகை மற்றும் உயர்கல்வி போன்ற திட்டங்களுக்கான வரம்பும் 8 லட்சம்
ரூபாயாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், போஸ்ட் - மெட்ரிக் மற்றும்
ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான
வரம்பையும், 2.50 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
வருமான வரி வரம்பையே, 12 லட்சம் ரூபாயாக்கிய மத்திய அரசு, இதை மட்டும் உயர்த்தாம இருக்குமா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், 2019 முதல் 2024 வரைஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, 47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2019ல் இருந்து இன்று வரை குறைந்தது, 84 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாக குறைத்து காட்ட தமிழக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
இதை பார்க்கிறப்ப, சட்டம் - ஒழுங்கு சம்பந்தமா எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டபோது, கொலைகளின் எண்ணிக்கையையும் குறைத்தே காட்டியிருப்பாங்களோ என்ற சந்தேகம் வருதே!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: 'தொகுதி மறுவரையறை விகிதாச்சார அடிப்படையில் தான் அமையும். மக்கள் தொகை அடிப்படையில் அமையாது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கியும் கூட, வேண்டு மென்றே மத்திய அரசுக்கு எதிரான கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டங்கள், போதை பொருட்கள், பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை மறைக்க, அறிவிக்கப்படாத ஒன்றை அறிவித்ததாக கூறி, பொய் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.
ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வித்தையில, தி.மு.க.,வினரை அடிச்சுக்கவே முடியாது!
விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேச்சு: ஹிந்து மதம் வெற்றி பெற வேண்டும் என்றால், ஹிந்து மதத்துடன் கூட்டணி வைத்திருக்கிற கட்சிகள் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்றால், படித்தவர்களை, பண்பாளர்களை, அறிவாளர்களை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
படித்தவங்க, அறிவாளர்கள் தான், 'டாஸ்மாக்'லயும் அதிகாரிகளா இருக்காங்க... அங்க என்ன நடந்துச்சு என்பது இவருக்கு தெரியாதா?