PUBLISHED ON : மார் 29, 2025 12:00 AM

தி.மு.க.,வின் முன்னாள் செய்தித் தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டி:
ஒரு
சில தனிநபர்களுக்காக, அதிகார மோகத்திற்காக, பதவி சுகங்களுக்காக, கட்சியை
நடத்துவது, மோசமான நிலைக்குதான் கொண்டு செல்லும். தேர்தல் அறிக்கைகளில்
மிகையான வாக்குறுதிகள் அளிப்பது நடைமுறைக்கு சாத்தியப்படாது. மக்கள் நலன்
கருதி, மிகுந்த கவனமாக ஆட்சி நடத்த வேண்டும். அத்தகைய தன்னலமற்ற தலைவர்கள்
எந்த கட்சியில் இருக்கின்றனர் என்பதே என் கேள்வி.
இவர் தேடும் தலைவர்கள் இந்தியாவுல எந்த கட்சியிலும் இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
கர்நாடகா, பீஹார், ஒடிசா, தெலுங்கானாவை தொடர்ந்து ஜார்க்கண்ட்டில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2008ம் ஆண்டு புள்ளி விபரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை, உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளன. இவ்வளவுக்கு பிறகும், 'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை' என்று தி.மு.க., கூறுவது சமூக அநீதி.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம் என்று தெரிந்து தானே, தி.மு.க., அரசு நழுவுது!
அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., இளைஞரணி முன்னாள் துணை செயலர் கே.சீனிராஜ் பேச்சு:
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 75 இடங்களில் வெற்றி பெற்றது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, புது வியூகத்தை ஏற்படுத்தி, மூன்று மடங்காக, 225 தொகுதி களில் வெற்றி பெறப்போவது உறுதி. தி.மு.க., அரசை வீழ்த்துவதற்கு, 'பழனிசாமி வருவாரு, தமிழகத்தை காப்பாற்றுவாரு' என்ற கோஷம், கோடிக்கணக்கான மக்கள், தொண்டர்கள் மனதில் ஒலிக்கத் துவங்கி உள்ளது.
பழனிசாமி டில்லி போயிட்டு வந்தாலும் வந்தார்... இவங்க அமர்க்களம் தாங்க முடியலையே!
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை:
பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தரம் வாக்குறுதியை, தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., கொடுத்து வருகிறது. எப்போதோ பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்து இருக்க வேண்டும். எனவே, சட்டசபையிலாவது, 110வது விதியின் கீழ் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை முதல்வர் அறிவிக்க வேண்டும்.
தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., ஏமாத்துறது நல்லா தெரிஞ்சும், ஓட்டு போட்டது யார் குற்றம்?