PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பேச்சு: திருப்பூர் மாவட்டம்
முழுதும் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக, 13,000க்கும்
மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற முகாம்களால்,
படித்து முடித்தவர்கள் வேலை தேடும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழகம்
முழுதும் நடந்த இதுபோன்ற முகாம்கள் வாயிலாக, 2 லட்சத்துக்கும்
மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.
இதன் வாயிலாக, '3.50 லட்சம் அரசு
காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்ற மாட்டோம்' என்பதை சொல்லாம சொல்றாரோ?
அ.ம.மு.க., பொது செயலர் தினகரன்: கட்சி துவங்கி எட்டு ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க.,வில் ஏன் நாங்கள் இணைய வேண்டும்? கூட்டணி பற்றி பேச இன்னும் காலம் உள்ளது. சுயநலத்தாலும், பதவி வெறியாலும், வழக்கு போட்டு விடுவரோ என்ற பயத்தாலும் தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற மறைமுகமாக உதவியவர்கள் யார் என்றும், தற்போது மறைந்து, ஒளிந்து டில்லி சென்றது யார் என்றும் அனைவருக்கும் தெரியும்.
இவர், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமியை தான் சொல்றார் என்பது தெரியுது... அவர் உள்ளே போனதால், இவரை தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பாம இருந்தா சரிதான்!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பேட்டி: த.வெ.க., பொதுக்குழுவில் விஜய் பேச்சில் தெளிவில்லை. 'டி.எம்.கே., - த.வெ.க., இடையே தான் போட்டி' என, விஜய் பேசுவது எதுகை மோனைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். விஜய் போன்றவர்களுக்கு படத்திற்கு பல மொழி வேண்டும். ஆனால், பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா? வாழ்க்கை விரிவடைந்ததால், சாலிகிராமத்தை விட்டு பனையூருக்கு சென்ற விஜய், பரந்துார் விமான நிலையத்தை எதிர்ப்பது சரியா?
படத்தை பல மொழிகளில், 'டப்' செய்தால், 'டப்பு' கொட்டுமே... ஆனா, பாடத்தில் பல மொழிகளை படிச்சு என்ன புண்ணியம்னு விஜய் நினைக்கிறாரோ?
தமிழக சபாநாயகர் அப்பாவு பேட்டி: நடிகர் விஜய், ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வருவாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததாக கூறினாலும், கடந்த ஆண்டு அவர் வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே வருமான வரியாக செலுத்தியுள்ளதாக தெரிவித்தார். 1,000 கோடி ரூபாய் வருவாய் இருந்தால், 300 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், மீதமுள்ள 220 கோடி ரூபாய் தொடர்பாக வருமான வரித் துறை சோதனை நடத்துமா?
தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் ஒருசேர விமர்சிக்கும் விஜய் மீது நடவடிக்கை எடுங்கன்னு பா.ஜ.,வை துாண்டி விடுறாரே... விஜய் சொன்ன மாதிரி, தி.மு.க.,வின் சீக்ரெட் ஓனர் பா.ஜ., தானோ?