PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்துல் வஹாப் பேட்டி: தமிழகத்தில்
உள்ள லோக்சபா எம்.பி.,க்களின் பலத்தைக் குறைப்பது, மாநிலத்தின் உரிமைகள்,
மக்கள் நலன்கள் மீது நேரடியாக தொடுக்கப்படும் தாக்குதலுக்கு சமமானது.
முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறார். தமிழக
நலனுக்கு மட்டுமல்லாமல், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் அனைத்து
மாநிலங்களின் உரிமைக்காகவும், அவர் போராடி வருகிறார்.
இல்லாத ஒன்றை
இருப்பதாகக் கருதி, அதற்கு போராட்டமும் நடத்துவது, ராமாயணத்தில்,
மாரீச்சன் எனும் மாயமானை சீதை தேடிப் போன கதையாகவே முடியும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்வேலுமணி பேட்டி: அ.தி.மு.க.,ஆட்சியில், கோவை மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், நான்காண்டுகளாக கோவை மாவட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது; எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. 2026-ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி. அப்போது இங்கு விடுபட்ட திட்டங்களும், தி.மு.க., செய்யாத திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
கோவை மாவட்டத்தின், 10 சட்டசபை தொகுதிகளும் அ.தி.மு.க., வசம் போய்ட்ட கோபம், ஆளுங்கட்சியினருக்கு இன்னும் தீரலையோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள ஆற்று மணலை, தனியார் ஒப்பந்ததாரர் வாயிலாக விற்பனை செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2013ல், பழைய சீவரத்தில் பறிமுதல் செய்த மணலை, 'ஆன்லைன்' ஏல முறையில் அரசு விற்பனை செய்தது. அதுபோல இப்போதும், ஆன்லைன் ஏல முறையில் மணலை விற்பனை செய்ய வேண்டும். அப்போது தான், மணலுக்கு அதிக விலை கிடைக்கும்.
மணலுக்கு அதிக விலை கிடைச்சு யாருக்கு என்ன லாபம்...? 'மாண்புமிகு'க்களுக்கு எதுவும் தேறாதே!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: நுாறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களுடன் தோளோடு தோள் நின்று, 1,600 இடங்களில் தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. 'எங்கே எங்கள் பணம்?' என்ற கேள்வியை இடியென, தி.மு.க.,வினர் மத்திய அரசை நோக்கி கேட்டு முழங்கியுள்ளனர். கொளுத்தும் வெயிலில் பாடுபட்டவர்களுக்குரிய கூலியை அளிப்பதற்கான நிதியைக் கூட மறுப்பது, நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல... அது, அவர்களை துன்புறுத்தும் செயல்!
கிராம சபை கூட்டத்துக்கு என அழைப்பு விடுத்து, தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை மாபெரும் வெற்றின்னு முதல்வர் சொல்றாரே!

