PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பேட்டி:
'வரும்
2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி
அமைக்கும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ஆனால்,
'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி அமைப்போம்' என, அ.தி.மு.க., தலைவர்கள்
தெரிவிக்காதது ஏன்? ஏற்கனவே, அ.தி.மு.க., அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது.
சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகம்,
டில்லிக்கு மாற்றப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் வருகிறது.
அதனால் தான், டில்லியிலும் அ.தி.மு.க.,வுக்கு அலுவலகம் கட்டியிருக்காங்களோ?
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.எஸ்.மாசிலாமணி அறிக்கை: ரிசர்வ் வங்கி என்பது நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. நகையை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் தொகை மற்றும் வட்டியை ஓராண்டு முடிவில் முழுதுமாக திருப்பி செலுத்த வேண்டும். நகையை மறு அடமானம் வைத்து கடனை புதுப்பிக்க முடியாது. தொகையை முழுமையாக செலுத்தாதவர்கள், நகையை பறிகொடுக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது. இதை மறு ஆய்வு செய்து, பழைய முறையே தொடர வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் முடிவால், நகை கடன் வாங்கியுள்ள ஏழை, நடுத்தர மக்கள் ரொம்பவே பாதிக்கப்படுவாங்க என்பது மறுக்க முடியாத உண்மை!
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா பேச்சு: காதல் வயப்பட்டு இருமனம் ஒருமித்து திருமணம் செய்து கொள்பவர்களை கவுரவ கொலை செய்கின்றனர். இதற்கு காரணம் ஆதிக்க ஜாதி உணர்வு தான். ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் பெற்ற போதும், பலனில்லை. இந்தியாவில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு அப்பாற்பட்டு அதிகாரம் பெற்ற வலிமையான இரண்டு தலைமைகள் உள்ளன. ஒன்று சமய தலைமை. மற்றொன்று ஜாதி தலைமை. இவைகள் அதிகாரம் பெற்று இருக்கும் வரை, ஜாதிகளற்ற சமுதாயம் உருவாகாது.
மத்திய அரசை விமர்சிக்கிற சாக்குல, தி.மு.க., அரசையும் சேர்த்து வாரி விடுறாரே!
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: தமிழகத்திற்கு, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை கொடுக்காமல், மத்திய அரசு தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது. இந்த வஞ்சக போக்கை கண்டித்து தான், தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த 100 நாள் வேலை திட்டத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் நடக்குதே... அதை கண்டித்தும் தோழர்கள் போராடலாமே!

