PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: தமிழகத்தில் எம்புரான்
திரைப்படம் வாயிலாக, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றது என சித்தரித்து,
அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படத்தில்
இடம் பெற்றுள்ள முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகள், வசனங்களை உடனே நீக்க
வேண்டும். எம்புரான் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
அந்த
படமே, அஞ்சாறு நாள் ஓடிட்டு பெட்டிக்குள்ள முடங்கும் விதமாகத்தான்
இருக்குன்னு விமர்சகர்கள் சொல்றாங்க... நீங்க தான் இப்படி அறிக்கை விட்டு,
அதை ஓட வைக்குறீங்க!
தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் குமரய்யா அறிக்கை: தமிழகத்தின், 28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், ஜன., 2025ல் முடியும் என தெரிந்திருந்தும், 'வட்டங்களை வரையறை செய்யப் போகிறோம்' என, தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல், தள்ளி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மாநில தேர்தல் ஆணையமும், மாநில அரசின் கைப்பாவையாக இருந்து, இதற்கு துணை போகிறது.
இப்ப உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினால், பதவிக்காக உடன் பிறப்புகள் அடிச்சுக்கிறது, சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் தான் தள்ளி வச்சிருக்காங்க!
வி.சி., கட்சியின் பொதுச்செயலர் ரவிகுமார் எம்.பி., அறிக்கை: கவுரவ கொலை வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். ஆணவ கொலைகளுக்கு பின்னணியாக விளங்கும் ஜாதி பஞ்சாயத்துகளை ஒழிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில், உரிமை சார்ந்த சமூகத்தில் கவுரவம் என்ற பெயரில் இடம் பெறும் குற்றங்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதை நாம் உறுதியாக அறிவிக்க வேண்டும்.
எதிர்காலத்தில், உங்க கட்சியின் ஆட்சியே தமிழகத்தில் வந்தாலும், ஜாதி பஞ்சாயத்துகளை ஒழிக்கவே முடியாது என்பது தான் குரூரமான உண்மை!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: தமிழக மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் என, தன் வாழ்நாள் முழுதும் உழைத்தவர் காமராஜர். திருச்சியில் அமையவுள்ள நுாலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டுவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். இது, முதல்வர் ஸ்டாலின், காமராஜர் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பையும், மரியாதையையும் காட்டுகிறது.
முதல்வரின் அப்பா, அதே காமராஜரை எப்படி எல்லாம் விமர்சித்தார் என்பது இவருக்கு தெரியாது போலும்!

