PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி:
'நீட்'
தேர்வை ஒழிப்பது தான் எங்கள் முதல் கொள்கை என, தேர்தலுக்கு முன்பும்,
பின்பும் தி.மு.க., கூறி வருகிறது. இது மாநில உரிமைக்கும், சமூக நீதிக்கும்
எதிரானது. இன்றைய சூழலில், நீட் தேர்வை ஒழிப்பது என்பது சாத்தியமில்லாத
ஒன்று. இதை தடுத்து நிறுத்தும் சக்தி, தி.மு.க.,வுக்கும் அதன் கூட்டணி
கட்சிகளுக்கும் என்றும் இருந்ததில்லை. இதை நாடே அறியும்.
தி.மு.க.,
தரப்புக்கும் இந்த உண்மை நன்றாகவே தெரியும்... ஆனாலும், கெத்தை விட்டு
கொடுக்காம நாடகம் ஆடிட்டு இருக்காங்க என்பது தான் உண்மை!
வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் பேட்டி: தமிழகத்தில் குட்காவை தடை செய்தது போல், உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும், பாக்கெட்டில் அடைத்த நொறுக்கு தீனிகளையும், வெளிநாட்டு குளிர்பானங்களையும் தடை செய்ய வேண்டும்.'டாஸ்மாக்' எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும்.
இவர் சொல்ற எல்லாத்தையும் தடை பண்ணிட்டா, வரி வருவாய் நின்று போய் தமிழக அரசு ஸ்தம்பிச்சிடும்!
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் பேட்டி: 'அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும் தான் மாநில கவர்னர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநிலங்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு, இந்தியாவில் உள்ள பா.ஜ., அல்லாத, அனைத்து மாநில அரசுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது.
அதே உச்ச நீதிமன்றம், 'செந்தில் பாலாஜி, அமைச்சரவையில் நீடிக்க விரும்புகிறாரா?' என்றும் கேட்டிருந்துச்சே... அதை பத்தியும் இவர் ஏதாவது கருத்து சொல்வாரா?
பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி அறிக்கை: டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்ந்தெடுக்கப் பட்ட குரூப் - 4 பணியாளர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும், ஒன்றரை ஆண்டுகளாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல.
இந்த, 128 பேருக்கே வேலை தர முடியாத அரசு, தேர்தல் வாக்குறுதியான, 3.50 லட்சம் அரசு காலி பணியிடங்களை இன்னும் ஓராண்டுக்குள் எப்படி நிரப்பும்?

