PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பேட்டி: பா.ஜ.,
- அ.தி.மு.க., கூட்டணி சரியில்லாத கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணிக்கு
அண்ணாமலை பலிகடா ஆக்கப்பட்டு உள்ளார். அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை
பேச்சுக்கு, கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர்
பதவியில் இருந்தும், முதல்வர் நீக்க வேண்டும். கோடநாடு வழக்கை முறையாக
விசாரித்து நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க., அரசு உள்ளது.
அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என்று எல்லா கட்சிகளை நோக்கியும் அம்பு எய்யும் இவர், யாரை ஒருங்கிணைக்க போறாரு?
அ.தி.மு.க., மாணவரணி மாநில செயலர் ராமச்சந்திரன் பேட்டி: எங்கள் கட்சியின் இளம் பேச்சாளர்கள் முகாமில், தற்போது 220 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், 25 சதவீதம் பேர் இளம்பெண்கள். 220 பேருக்கும், சென்னையில் இறுதிக்கட்ட பேச்சு போட்டி நடத்தப்படும். இதில், அதிக மதிப்பெண் பெறும் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த பேச்சாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினருக்கு சிம்மசொப்பனமாக இருப்பர்.
மேடைகள்ல எப்படி எல்லாம் பேசக் கூடாது என்று, பொன்முடியை உதாரணம் காட்டி பயிற்சி குடுங்க!
ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அறிக்கை: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்து போட்டியிடுவது என்ற முடிவு வரவேற்கத்தக்கது. இக்கூட்டணிக்கு வாழ்த்துக்கள். கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, பழனிசாமி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் நிச்சயமாக பயனடையும்.
'இப்ப இருக்கிற தி.மு.க., ஆட்சியால், தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை'ன்னு சொல்லாம சொல்றாரோ?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில், தமிழகம் இந்திய அளவில் முன்னணி மாநிலமாக இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில், தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், அவற்றை உடனடி யாக நிரப்புவது மட்டுமன்றி, போதிய எண்ணிக்கையில் மகப்பேறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வளவு பற்றாக்குறை இருக்கும்போதே, இறப்பு விகிதம் குறைஞ்சிருக்குது என்றால், காலியிடங்களை நிரப்பினால், இறப்புகளே இல்லாத நிலையை ஏற்படுத்தலாமே!