PUBLISHED ON : ஏப் 22, 2025 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி: பா.ஜ.,வுடன்
அ.தி.மு.க., சேர்ந்ததால், அரசியல் ரீதியாக எவ்வித நன்மை கிடைக்கவும்
வாய்ப்பில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்ற துறைகளை
வைத்து கொண்டு, அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளை மிரட்டி, தன் பக்கம்
இழுத்து வருகின்றனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, தமிழகத்தில் வாழும்
லட்சக்கணக்கான முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஒருபோதும் ஆதரிக்க
மாட்டார்கள். தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, மிகப்பெரிய
வெற்றியை எதிர்வரும் காலங்களிலும் பெறும்.
சட்டசபையில் தி.மு.க.,வுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தவர், 'யு டர்ன்' போட்டு அங்கேயே போகப் போறார் என்பது நல்லாவே தெரியுது!
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் பேச்சு: அமைச்சர் பொன்முடி பேசியது, ஹிந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. ஒரு மதத்தையும், மக்களையும் இழிவாகப் பேசிய அமைச்சரின் பேச்சுக்கு, முதல்வர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை; பெயரளவுக்கு கட்சிப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அமைச்சர் பதவியில் இருந்தே அவரை நீக்க வேண்டும். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தவறினால், நாங்கள் நீதிமன்றத்தையும் நாட தயாராக உள்ளோம்.
பொன்முடி மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பது போல தெரியவில்லை... நீதிமன்றம் தான் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்!
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 'பா.ஜ.,வோடு கூட்டணி கிடையாது' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். தற்போது, பயத்தின் காரணமாக பா.ஜ.,வோடு கூட்டணி வைத்துள்ளார். இது குறித்து தான் நாங்கள் விமர்சனம் செய்தோமே தவிர, அவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. 2026ல் தி.மு.க., தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி தான் வெற்றி பெறும்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால, தி.மு.க., அணி தான் பயந்திருப்பது போல தெரியுது... அதனால் தான், அந்த கூட்டணியை கடுமையா விமர்சிக்கிறாங்க!
இந்திய கம்யூ., கட்சி தேசிய பொதுச்செயலர் ராஜா பேச்சு: மத்திய அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இடுபொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்றால், மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
தப்பி தவறி மோடி ஆட்சி போய், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், இவர் இதே பல்லவியை தான் பாடுவாரு!