PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செயலர் எஸ்.ஜி.சூர்யா பேச்சு: அ.தி.மு.க., ஆட்சியில்,
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தை, நீதிபதி தலைமையிலான குழு
விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தும், குற்றம்
சாட்டப்பட்டவர்களை, தி.மு.க., அரசு தண்டிக்காதது ஏன்? தமிழகத்தில் சட்டம் -
ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது என முதல்வர் பேசி முடித்த, 24 மணி நேரத்தில்,
நான்கு அரசியல் கொலைகள் நடக்கின்றன. தமிழக அரசியல் வரலாற்றில் சட்டசபை
நடந்த ஒரு மாதத்தில், 78 கொலைகள் நடந்துள்ளன என்றால் சட்டம் - ஒழுங்கு
எப்படி சரியாக இருக்க முடியும்?
'கிட்டதட்ட, 8 கோடி மக்கள்
இருக்கும் தமிழகத்தில், 78 கொலைகள் எல்லாம் சர்வசாதாரணம்'னு தி.மு.க.,
தரப்பில் இருந்து சால்ஜாப்பு சொன்னாலும் சொல்லுவாங்க!
தமிழக காங்., - எஸ்.சி., துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அறிக்கை: கடன் வசூலிக்கும்போது, மனித உரிமைகள் பெருமளவில் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. இந்த பிரச்னைக்கு மணி கட்டியிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி. தனிநபர்கள், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க வகை செய்யும் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். இது, அடித்தட்டு மக்களுக்கு, குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
நல்ல விஷயம்தான்... ஆனா, இந்த சட்டத்தைக் காட்டியே, கடன் குடுத்தவங்களை மிரட்டும் வாய்ப்புகளும் இருக்கே!
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: திருக்கோவிலுாரில், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின், மது விருந்து நடத்தப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறையை எப்படி வழிநடத்த வேண்டும் என, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக செயல்படும் ஒரே கட்சி தி.மு.க., என்பது நிரூபணமாகி உள்ளது.
என்னமோ, தி.மு.க.,வில் மட்டும்தான் மது குடிக்கிறவங்க இருப்பது போலவும், மற்ற கட்சியினர் மதுவே குடிக்க மாட்டாங்க என்பது போலவும் பேசுறாரே!
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை: இந்த பட்ஜெட்டிலும் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் அறிவிக்கவில்லை. 12,000 பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. காலி பணியிடங்களையும் நிரப்பவில்லை. பழைய ஓய்வூதியத்தையும் கொண்டு வரவில்லை.
அரசு ஊழியர்கள் எனும் அழுத பிள்ளைக்கு, கிலுகிலுப்பையைக் காட்டியது போலவே முதல்வரின் அறிவிப்புகள் இருக்குது!

