PUBLISHED ON : மே 03, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தமிழகத்தில் நிலவும் அமைதிக்கு காரணம், என்னுடைய காவல் துறைதான். சட்டம் - ஒழுங்கில் கல் விழாதா என துடிப்பவர்கள் ஆசையில் மண்தான் விழுந்துள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அன்றாடம் படுகொலைகள், சங்கிலி பறிப்பு, பெண் வன்கொடுமை என தொடர் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் நடக்கின்றன. சட்டம் - ஒழுங்கில் கல் அல்ல... பாறையே விழுந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியவில்லை. உங்கள் காவல் துறையை எப்போது அரசின், மக்களின் காவல் துறையாக மாற்றப் போகிறீர்கள்.
காவல் துறை என்றுமே நண்பன் தான், அதாவது ஆளுங்கட்சிக்கு... நாளைக்கே உங்க கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தி.மு.க., தலைவர்கள், '2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றும்' என, இறுமாப்போடு பேசி வருவது, 'எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுவது' போலத்தான் இருக்கிறது. கடந்த 1991ல் அ.தி.மு.க., கூட்டணி 225 தொகுதிகளில் பெற்ற வெற்றி தான், இதுவரை இருந்து வரும் சாதனை. இந்த சாதனையை, தி.மு.க., கூட்டணியால் எந்த காலத்திலும் முறியடிக்க முடியாது.
இவர் சொல்ற 1991 தேர்தலில், அ.தி.மு.க., மட்டும் 164 தொகுதிகளில் தான் ஜெயித்தது... ஆனா, 1971 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மட்டுமே, 184 தொகுதிகளில் வெற்றி பெற்ற சாதனையை இதுவரை எந்த கட்சியும் முறியடிக்கலையே!
அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அறிக்கை: 'பூத்' கமிட்டிகளை யூத் கமிட்டிகளாக்குகிறது தமிழக வெற்றிக் கழகம். பட்டுவாடாவை நம்பி படுகுழிக்குப் போகிறது அ.தி.மு.க., தலைமை. கூட்டணியோடு கோட்டையையும் தக்க வைப்பதில் தீர்க்கமாய் இருக்கிறது தி.மு.க., தரப்பு. மொத்தத்தில் ஐ.பி.எல்.,ஐ விஞ்சுகிறது அரசியல் களம்.
எல்லாரும் களத்தில் நின்று ஆடுறப்ப, இவர் மட்டும் பார்வையாளர் வரிசையில் நின்று, 'கமென்ட்' பண்ணிட்டு இருக்காரே!