PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி:
காஷ்மீர்,
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சுற்றுலா
பயணியர், 26 பேர் கொல்லப்பட்டனர்; இதனால், நாடே துயரத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினுக்கு, 'மாநில சுயாட்சி நாயகன்'
என்ற பெயரில் நடத்திய பாராட்டு விழா தேவையற்றது; அதை தவிர்த்து இருக்க
வேண்டும். இன்னும், 15 ஆண்டுகளுக்கு மத்தியில் பா.ஜ., ஆட்சிதான்.
இவங்க இப்படி பாராட்டு விழாக்களை நடத்திட்டே இருந்தால், 15 வருஷம் அல்ல... 25 வருஷம் ஆனாலும், பா.ஜ., ஆட்சியை அகற்றவே முடியாது!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி: மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அறிவிப்பு வெளியிட்ட பின், தி.மு.க., கூட்டணி கட்சியினருக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது. அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில், வேறு பல முக்கிய கட்சிகளும் கூட்டணிக்கு வர உள்ளன; இதனால், கூட்டணி வலிமை பெறும்.
அ.தி.மு.க., - பா.ஜ., செல்வாக்கோடு, சந்தடி சாக்குல தன் கட்சி செல்வாக்கையும் சேர்த்து உயர்த்திக் காட்டும் வாசன் சாமர்த்தியசாலிதான்!
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த காஷ்மீர் மக்கள், அரசியல்வாதிகள் கூட, பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் உள்ள முக்கிய முஸ்லிம் தலைவர்கள், 'பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்' எனக் கோரி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்கூட, தமிழகத்தில் உள்ள திருமாவளவன், சீமான் போன்றவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசி வருவது சரியல்ல. இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அதெல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் நடக்காது... 2026ல், உங்க தயவில் புதிய ஆட்சி அமைந்தால் தான் சாத்தியம்!
பெரம்பலுார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பூவை செழியன் பேச்சு: தி.மு.க., வில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டபோது, அவரது அண்ணன் சக்கரபாணி தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க., கொடியை ஏற்றுவது, பெயர் பலகைகளை திறப்பது போன்ற பணிகளில் மும்முரமாக இருந்தார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பொறுப்பில் இருந்த சோலை என்பவர் வாயிலாக, கட்சியில் தனக்கு பதவி கேட்டார்; ஆனாலும், எம்.ஜி.ஆர்., பதவி தரவில்லை.
'தி.மு.க.,வின் குடும்ப, வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி துவங்கிய நாமே, அந்த தவறை செய்யக்கூடாது' என்பதில் எம்.ஜி.ஆர்., அவ்வளவு உறுதியா இருந்திருக்காரே!

