PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செயலர் எஸ்.ஜி.சூர்யா பேச்சு:சுதந்திர இந்தியாவில்
முதல் முறையாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ.,
ஆட்சியில்தான் எடுக்கப்பட உள்ளது. காங்கிரசின், 70 ஆண்டுகால ஆட்சியில் ஏன்
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. காங்., ஆட்சி நடக்கிற மாநிலங்களிலும்,
பீஹார் மாநிலத்திலும் ஜாதி கணக்கெடுப்பை நடத்தியது போல், தமிழகத்தில்
முதல்வர் ஸ்டாலினும் நடத்தியிருக்கலாம்; ஏன் நடத்தவில்லை?
'எப்படியும் மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடும்' என்ற முதல்வரின் நம்பிக்கைதான் காரணம்!
தமிழக பா.ஜ., மீனவரணி தலைவர் எம்.சி.முனுசாமி பேச்சு: காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ வீரரின் தலையை கொய்து எடுத்துச் சென்றபோது, காங்கிரஸ் ஆட்சியாளர்கள், 'பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்' என்றனர். ஆனால், பஹல்காமில் இந்தியர்கள் கொல்லப்பட்டதும், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு முடிவுரை கட்டியுள்ள பிரதமர் மோடி வீரத்திருமகன் என்றால் மிகையல்ல.
பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் தான் பதிலடி தரணும் என்பதில், நம் பிரதமர் மோடி தெளிவாக இருக்கார்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், கடந்த ஐந்து மாதங்களில், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பணத்தை இழந்த 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, 16 மாதங்களாகின்றன. ஆனால், இந்த வழக்கை விரைவுபடுத்தி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
'டாஸ்மாக்'கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடோடிப் போன அரசுக்கு, ஆன்லைன் சூதாட்ட வழக்கில் அக்கறையில்லையே!
த.மா.கா., பொதுச்செயலர் முனவர் பாட்ஷா பேட்டி: கடந்த 1996 -- 2001ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனாலும், 2001 தேர்தலில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமையவில்லை. தி.மு.க., ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ஆட்சியில் தொடர்ந்ததாக சரித்திரம் இல்லை. மக்களை பொறுத்தவரை, மாற்றம் வேண்டும் என தீர்மானித்து விட்டால், ஆட்சி மாற்றத்தை உருவாக்கிவிடுவர்.
அது இருக்கட்டும்... 1996 மற்றும் 2001ல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களுக்கு த.மா.கா.,வும் முக்கிய காரணமா இருந்துச்சு... இப்ப, அதே பலத்துடன் அந்த கட்சி இருக்கா?