PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, மருது அழகுராஜ் அறிக்கை: அரசியல்,
அப்பாவையும், மகனையுமே பிரித்து வைக்கும்போது, எப்படி பழனிசாமியையும்,
பன்னீர்செல்வத்தையும் சேர்த்து வைக்கும். 75 ஆண்டு பவள விழா கண்ட
தி.மு.க.,வும், 53 ஆண்டு பொன்விழா கண்ட அ.தி.மு.க.,வையும், எஞ்சியுள்ள
பத்தே மாதத்திற்குள் விஜய் ஒரு சேர வீழ்த்த வேண்டும் என்றால், அவருக்குள்
அண்ணாமலையின் ஆன்மா புக வேண்டும்.
இவர், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையை சொல்றாரா அல்லது, 'அண்ணாமலை'யாக நடித்த ரஜினியை சொல்றாரா?
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை: தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பொறுக்க முடியாமல், 'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான், தமிழகத்திற்கான 2,152 கோடி ரூபாயை ஒதுக்குவோம்' என, மிரட்டியது மத்திய அரசு. இதற்கு அடிபணிய, இது அ.தி.மு.க., ஆட்சி அல்ல. 'அந்த தொகையையும் மாநில அரசே ஏற்கும்' என அறிவித்து, மாணவர்களின் கல்வி உரிமையை காத்தது தி.மு.க., அரசு. கல்வி உரிமை சட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய, 617 கோடி ரூபாயை தராமல், மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.
இப்படி எல்லா விஷயத்திலும் மத்திய அரசுடன் மல்லுக்கு நின்றால், மாநில அரசின் நிதி நிலைமை அதலபாதாளத்துக்கு போயிடாதா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி: 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குநர் அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனை நடந்துள்ளது வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய உதயநிதியின் நெருங்கிய நண்பர் ரித்திஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் போன்றோரை காணவில்லை. திடீரென முளைத்த திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ், முதல்வர் குடும்பத்தினரோடு நெருக்கத்தில் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். அனைவராலும் தம்பி என அழைக்கப்பட்டவர், உறுதியாக இந்த வளையத்தில் சிக்குவார்.
தி.மு.க.,வை நிறுவிய அண்ணா துரை, கட்சியினரை பாசத்துடன், 'தம்பி' என அழைத்தார்... இப்ப, தம்பி என்றாலே, தி.மு.க.,வின் தளபதிகளே நடுங்குறாங்க!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: கோடை விடுமுறை முடிவுக்கு வரவுள்ள நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சுகாதாரமான கழிப்பறைகள் இல்லை; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. இந்த விடுமுறை காலங்களில், மேற்கண்ட கட்டமைப்புகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
எல்லா, 'இல்லை'களுடன், தமிழக அரசுக்கு மனமும் இல்லை; நேரமும் இல்லை என்பதையும் சேர்த்துக்குங்க!