PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: எல்லா மக்களும்,
அவர்களது தாய்மொழி பழமையானது என்பதை நம்புவர். ஒரு மொழியை தாழ்த்தியும்,
ஒரு மொழியை உயர்த்தியும் பேசினால் பிரச்னை வருவது இயல்புதான். நாம் சொல்ல
வேண்டியது, தமிழ் ஒரு செம்மொழி என்று. தமிழ் மொழி, 3,000 ஆண்டுகள்
பழமையானது; அதற்கான வரலாற்று தரவுகளை நிறுவி இருக்கிறோம். நம் மொழி உயர்வை
உலகிற்கு சொல்ல வேண்டுமே தவிர, இன்னொரு மொழியை சீண்டக்கூடாது.
இவங்க, தனக்கு ஆதரவா கருத்து சொல்றாங்களா, எதிரா பேசுறாங்களா என்பதை, எப்பவும் குழப்பமா பேசும் நடிகர் கமலே கண்டுபிடிக்க முடியாது!
அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மாநில திட்டங்களுக்காக, பிரதமரை சந்தித்தால், அது அடிமைத்தனம். கருப்பு பலுான் பறக்க விட்ட ஸ்டாலின், முதல்வரானதும் சோபாவுக்கு வலிக்காமல் அமர்ந்து பிரதமரை பார்த்தால், அது சிறந்த நிர்வாகமா?
வர்ற, 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், மீண்டும் கருப்பு பலுான் பறக்க விடும் நிலை வந்துடக்கூடாதுன்னு தான், இப்பவே ராஜதந்திர சந்திப்புகளை முதல்வர் நடத்துறாரோ?
அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அறிக்கை: ஒரு டஜன் வழக்கு களை, முன்னாள் முதல்வர் ஜெ., மீது போட்ட அன்றைய தி.மு.க., ஆட்சி, இன்று ஒரே ஒரு வழக்கை கூட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது போடலையே, ஏன் என நான் பலமுறை யோசித்ததுண்டு. இப்பதான் புரிஞ்சுது. ஒரு டஜன் தேர்தல்களில் தொடர்ந்து தங்களை வெற்றி பெற வைத்த பழனிசாமியை, எதற்காக வழக்கு போட்டு இம்சிக்கணும்னு தி.மு.க., நினைக்கிறது தப்பில்லையே!
தி.மு.க., என்ன நினைக்குதோ தெரியாது... ஆனா, தன் பழைய தலைவர் பழனிசாமிக்கு கேடு விளைவிக்க இவர் துடிப்பது நல்லாவே தெரியுது!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மதுரை மா.கம்யூ., - எம்.பி., அளித்த மனு: நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக, ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அவற்றில் ஒன்றாக, 'கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடனை பொறுத்த வரை, அது 100 சதவீதம் பாதுகாக்கப்பட்ட கடன். ஆகவே, கடன்தாரரின் திருப்பி செலுத்தும் திறனை, ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கடனை கட்டாதவங்களின் நகைகளை ஏலம் விட்டு, அந்த தொகையை வங்கியே எடுத்துக் கொள்வதால், இந்த நிபந்தனை நீக்கப்பட வேண்டியது அவசியம்!