PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி:தமிழக
அரசின் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்
பாதிப்புக்குள்ளாகி உள்ளன. மின் கட்டண உயர்வுக்கு எதிராக, பா.ஜ., போராடும்.
மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்துவோம் என பொய் வாக்குறுதி
அளித்தனர். ஆட்சியின் நிறைவு காலம் வந்தும் நிறைவேற்றவில்லை. சாதாரண மக்களை
கசக்கி பிழியக்கூடிய அரசாக தி.மு.க., அரசு உள்ளது.
விடுங்க... இதெல்லாம் உங்களது தே.ஜ., கூட்டணிக்கு தான் லாபமாக முடியும்!
அன்புமணி அணியின், பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி பேட்டி: ஜனநாயக முறைப்படி, பா.ம.க., தலைவரை மாற்றுவது குறித்து, 108 மாவட்டச் செயலர்களை அழைத்து ராமதாஸ் ஏன் கருத்து கேட்கவில்லை. பெண்களுக்கு முன்னுரிமை என கூறும் ராமதாஸ், ஏன் கட்சியில் பெண்கள் இருக்கக்கூடாது என கூறுகிறார். அன்புமணியின் மனைவி அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லையா அல்லது பெண்களே வரக்கூடாது என நினைக்கிறாரா?
'குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வர மாட்டாங்க'ன்னு வாக்குறுதி தந்துட்டு, எல்லாரும் வரிசை கட்டி வந்தா நல்லாயிருக்காதுன்னு தான் ராமதாஸ் நினைக்கிறாரு!
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டி: நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பு என, தமிழகத்தை மத்திய அரசு தொடர்ச்சியாக வஞ்சிப்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்து சொல்லி, தி.மு.க., வில் உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால், நீட் தேர்வில் விலக்கு பெற்றிருப்போம். மத்தியில் சாதகமான ஆட்சி வரும் போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெற்று விடுவோம்.
'நீட் தேர்வை ரத்து பண்ண முடியாது'ன்னு உச்ச நீதிமன்றமே சொல்லிய பிறகும், இன்னும் நம்ம மாணவர்களை ஏமாற்றுவது சரியா?
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி: தமிழகத்தை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. ஆனால், யாரும் தனி நபருக்கு செய்ததில்லை. எடுத்துக்காட்டாக மகளிர் உரிமை திட்டம். இதில், ஏராளமான பெண்கள் மாதம், 1,000 ரூபாய் பெறுகின்றனர். விடியல் பயணம் மூலமாக மகளிருக்கு இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டத்தில், 60 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இந்த சாதனைகளை பொது மக்களிடம் சுட்டிக்காட்டி, ஏற்றுக்கொண்டால் அவர்களை தி.மு.க.,வில் இணைக்கிறோம்.
அரசு பணத்தில் நலத் திட்டங்களை கொடுத்துட்டு, அதன் பலனை கட்சிக்கு அறுவடை பண்ற சாமர்த்தியம் உங்களிடம் மட்டும் தான் இருக்கு!