PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு:இன்றைய
நிலையில், பா.ஜ., மட்டும் தான் நம் கூட்டணியில் உள்ளது. பழனிசாமி தான்
முதல்வராக வர வேண்டும் என்பதில் மத்திய அரசு பச்சைக்கொடி காட்டி, நம்மை விட
ஆர்வமாக இருக்கிறது. நாம வரணும் என்பதை விட, தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு
அனுப்ப வேண்டும் என்பதற்காக பா.ஜ.,வினர் முழு ஆதரவு கொடுக்கின்றனர்.
இன்னும் பல வகையில் ஆதரவு வரும். பா.ஜ.,வினர் எதற்கும் தயாராக
இருக்கின்றனர்.
'பக்கத்து இலைக்கு பாயசம்' என்பது மாதிரி, பழனிசாமி
தலைமையிலான கூட்டணி அரசில் பங்கு பெற, பா.ஜ.,வினர் துடிக்கிறாங்க என்பது
தான் நிஜம்!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், 1.92 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க., வெற்றி பெற்றது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., 10 சதவீதம் ஓட்டுகளை நிச்சயம் இழக்கும் என்ற புள்ளிவிபர தகவல்களை உளவுத்துறை மூலம் அறிந்த முதல்வர் ஸ்டாலின், அதை மடைமாற்றம் செய்ய, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இன்றைக்கு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை திட்டம் மிகப்பெரிய தோல்வியை தழுவி உள்ளது.
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற அவங்க திட்டத்துக்கு போட்டியா, 'ஓரணியில் தி.மு.க., எதிர்ப்பு கட்சிகள்' என்ற திட்டத்தை நீங்க செயல்படுத்தினால் தான் வெற்றி சாத்தியமாகும்!
வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பேச்சு: பா.ம.க.,விற்கு ராமதாஸ் தான் தலைவர். வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. யாரையும் நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டும் தான் உள்ளது. இதை தான் பா.ம.க.,வின் சட்ட விதிமுறைகள் சொல்கின்றன. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அவர் பின் தான் அனைவரும் வருவர்.
ராமதாஸ் பின்னாடி யார் வர்றாங்களோ தெரியாது... ஆனா, பா.ம.க.,வை முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு அழைக்குமா?
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டி: அ.தி.மு.க., தொண்டர்களுக்கு எல்லாம், பா.ஜ.,வோடு பழனிசாமி கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. ஆனால், பா.ஜ.,வை நன்மை பயக்கும் கட்சி என்று பழனிசாமி கூறுகிறார். முன்பு பா.ஜ.,வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து, நன்மை பயக்கும் கட்சி என்று பழனிசாமி கூறுகிறார்.
கூட்டணி வைத்தால் ஒரு பேச்சு, வைக்காவிட்டால் ஒரு பேச்சு என்பதற்கு அ.தி.மு.க., மட்டும் விதிவிலக்கா என்ன?