PUBLISHED ON : ஜூலை 14, 2025 12:00 AM

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு:
கட்சியில்
தனிநபர்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் செல்வது தான் கட்சி பணி
என, மாநில, மாவட்டச் செயலர்கள் பலரும் கருதுகின்றனர். அது போல, மாவட்டச்
செயலர்கள் மீது புகார் வைத்தால், உடனே நடவடிக்கை எடுத்து விட முடியாது.
ஒட்டுமொத்த மாவட்ட கட்சி நிர்வாகமும், மாவட்டச் செயலர்களுக்கு எதிராக
திரண்டால் கூட, அவர்களை எளிதாக துாக்கி எறிந்து விட முடியாது.
இதன் வாயிலாக, 'மாவட்டச் செயலர்கள் வைப்பது தான் நம்ம கட்சியில் சட்டம்' என்பதை சொல்லாம சொல்றாரோ?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
தமிழகத்தின் கிராமப்புற துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிப்பவர்களுக்கு குறைந்தபட்ச கூலி மறுக்கப்படுவது, தமிழக அரசின் மனிதாபிமானமற்ற ஆட்சியை வெளிப்படுத்துகிறது. 'துப்புரவு பணியாளர்களுக்கு, 1,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்' என அரசு அறிவித்து, ஒன்பது மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இன்றைக்கும் பல இடங்களில் இந்தத் தொகை வழங்கப்படவில்லை.
'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பது போல அரசாணை போட்டும், அதன் பலன் கிடைக்கலையா?
இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது பேச்சு:
தேர்தல் கமிஷன் மற்றும் அரசமைப்பை பாதுகாக்க வேண்டும். ஆனால், அது, பா.ஜ.,வின் உத்தரவுகளுக்கு இணங்கி, இயங்கி கொண்டிருக்கிறது. பீஹாரில் முன்னெடுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் மோசடியின் நீட்சியாகத் தான் பார்க்க முடிகிறது.
இதன் வாயிலாக, மக்களின் ஓட்டுரிமை மட்டுமல்லாது, அவர்களின் எதிர்காலமும் பறிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் முஸ்லிம்களின் ஓட்டுரிமையை பறித்து, அவர்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்குவது தான், பா.ஜ.,வின் திட்டம்.
இந்த பிரச்னை, சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிடுச்சே... அதன் பிறகும், இதை விமர்சிப்பது சரியா?
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
'மக்களை காப்போம்;- தமிழகத்தை மீட்போம்' என்ற லட்சியத்துடன் , எழுச்சி பயணத்தை கோவையில் துவங்கினேன். தி.மு.க., அரசின் அக்கிரமம், அட்டூழியங்கள், செயலற்ற தன்மையால், எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை பார்த்து, மனம் நொந்தேன். இதற்கெல்லாம் முடிவாக, அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என, மக்கள் என் கரங்களை பிடித்து தெரிவித்தனர். இருண்ட காலத்தை மாற்றி, இழந்த பொற்காலத்தை மீட்டு தருவேன் என, மக்களிடம் உறுதி அளித்துள்ளேன்.
தமிழகத்தின் இருண்ட காலம், தேர்தல் வரும் போது தான், இவரது கண்களுக்கு தெரிய வந்துச்சா?