PUBLISHED ON : ஜூலை 16, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி, 'அரசு நிதியில் கல்லுாரி கட்டாமல், கோவில்
நிதியில் ஏன் கட்டுகிறீர்கள்?' என கேட்டதற்கு, 'கல்விக்கு எதிராக
பேசுகிறார்' என முதல்வரும், தி.மு.க.,வினரும் திசை திருப்பி வருகின்றனர்.
தமிழக அரசு முதலில் கோவில் நிலங்களுக்கும், சொத்துக்களுக்கும் சந்தை
மதிப்பில் குத்தகை, வாடகை வசூலித்து, வருவாயை பெருக்க வேண்டும். அந்த
நிதியின் ஒரு பகுதியை கல்வி, மருத்துவத்திற்காக செலவு செய்யலாம்.
கோவில் சொத்துக்களுக்கு மட்டும் முறைப்படி குத்தகை, வாடகை வசூல் செய்தால், தமிழக அரசின் ஒட்டுமொத்த கடனையும் ஓராண்டில் அடைச்சுடலாம்!
தமிழக பா.ஜ., செயலர் எஸ்.ஜி. சூர்யா அறிக்கை: விளக்கின் திரியை போல, தங்களை தாங்களே கரைத்துக் கொண்டு இந்த சமூகத்திற்கு அறிவொளி ஏற்றும் உன்னத பணியை செய்பவர்கள் ஆசிரியர்கள். ஆனால், தி.மு.க., அரசோ, தேனை உறிஞ்சிய பின் சக்கையை துாக்கி எறிவதை போல, பல்லாண்டுகளாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு, அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் நடுத்தெருவில் விட்டுள்ளது.
விடுங்க... ஆசிரியர்களிடம் கோபம், உங்களது தே.ஜ., கூட்டணிக்கு லாபம்!
*************
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவர் கா.லியாகத் அலிகான் பேச்சு: 'பள்ளிகளில் ஏற்படும் ஜாதி மோதல்களை தடுக்க, பள்ளிகளின் பெயர்களோடு உள்ள ஜாதிய குறிப்பை நீக்க வேண்டும்' என்ற முன்னாள் நீதிபதி சந்துருவின் பரிந்துரையை ஏற்று, 'பள்ளி, கல்லுாரி விடுதிகள் இனிமேல் சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும்' என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஆனால், பா.ம.க., தலைவர் அன்புமணி, 'சமூக நீதி என்ற பெயரை தி.மு.க., அரசு பயன்படுத்துவது கொடுமை' எனக் கூறி, வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இடம் பிடிக்கத் துடிக்கும் அன்புமணி, தி.மு.க., அரசுக்கு ஆதரவாக எப்படி பேசுவார்?
**************
தமிழக காங்., பொதுச்செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அருள் அன்பரசு பேட்டி: ஆட்சியில் பங்கு கேட்போம்; அதிக தொகுதிகளை கேட்போம். நாங்கள் யாருக்கும் கொத்தடிமை அல்ல. 'அரசியலில் நிரந்தர எதிரியும், நிரந்தர நண்பரும் இல்லை' என்ற பழமொழி உண்டு. காங்கிரஸ் கோரிக்கையை தி.மு.க., தலைமை ஏற்க முன்வர வேண்டும்.
இவர் எதையும் சந்திக்க தயாரா இருப்பாரு... இவரது கட்சியின் டில்லி மேலிடம் தயாரா இருக்குமா?
****************

