PUBLISHED ON : ஜூலை 28, 2025 12:00 AM

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர், கோவி.செழியன் பேச்சு:
'நாங்கள்
 ஆட்சிக்கு வந்தால், தாலிக்கு தங்கம் தருவதை போல, தாலிக்கு தங்கத்தோடு 
பட்டுப் புடவையும் சேர்த்து தருவோம்' என்கிறார் பழனிசாமி. முந்தைய, நான்கு 
ஆண்டு பழனிசாமி ஆட்சியில், தாலிக்கு தங்கம் தராமல், திருமண உதவித்தொகை 
திட்டத்தையும் தடுத்து நிறுத்தியவர், இப்போது பட்டுப்புடவை தருவேன் 
என்கிறார். தாலிக்கே வழிகாட்டாத நீங்கள், பட்டுப் புடவையை எப்படி 
தருவீர்கள்?
அது சரி... 'நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் நாங்க மட்டும் தான் தருவோம்'னு சொல்லாம சொல்றாரோ?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர், ராம.ரவிகுமார் அறிக்கை:
தர்மபுரி மாவட்டம், உழவன் கொட்டாய் பகுதியில், அரசு பஸ்சின், 'ஸ்டியரிங்' கட்டாகி, சாலையோர வீட்டின் மீது மோதி, 3 வயது சிறுமி பலியாகி உள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பஸ் பிரசார பயணம் மேற்கொண்ட நிலையில், 'சுந்தரா டிராவல்ஸ் பஸ்' என, கிண்டல் செய்த முதல்வர் ஸ்டாலின், தற்போது நடந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், சுந்தரா டிராவல்ஸ் பஸ்சை விட, படு மோசமான நிலையில் தான் ஓடிட்டு இருக்கு!
 தமிழக, காங்., துணை தலைவர், 'நாசே' ராமச்சந்திரன் அறிக்கை:
இளங்கோவனுடன் ப யணித்த பெரும்பாலானவர்கள் ஒதுங்கியும், ஒதுக்கப்படும் நிலையிலும் இருக்கின்றனர். இது, சொல்லொணா துயரத்தை எனக்கு அளிக்கிறது. இது, காங்கிரசை பலவீனப்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும். இளங்கோவன் ஆதரவாளர்களை புறந்தள்ளி விட்டு, அரசியல் செய்ய காங்கிரஸ் கட்சி என்றைக்கும் இடம் அளிக்காது. எனவே, காங்கிரசை பலப்படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம்.
காங்கிரசில் இப்ப இருக்கும் கோஷ்டிகளையே எண்ண நேரமில்லை... இதுல, மறைந்து போன, இளங்கோவனின் கோஷ்டி பத்தி கவலைப்படுறாரே!
ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா அறிக்கை: 
கடந்த, 32 ஆண்டுகளாக வைகோவுடன் பயணித்துள்ளேன். ஆயினும், தன் மகன் துரைக்காக, என் மீது துரோகி என்ற பழிச்சொல்லை வைகோ துாக்கி வீசிய போது, என் எதிர்காலம் சூனியமாகி விட்டதாக எண்ணி, தனிமையில் துடித்தேன்; துாக்கத்தை தொலைத்தேன். ஆனால், தொண்டர்கள் என்னை கைவிடவில்லை. நான் குற்றமற்றவன், துரோகி இல்லை என, என்னை வாரி அணைத்து ஆற்றுப்படுத்துகின்றனர். அவர்களின் துாய அன்பால் மீண்டு வருவேன்; போராடுவேன்.
ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு நெருக்கமாக இருந்த பலரும், கடைசியில இப்படி தான் சோக ராகம் பாடுறாங்க!

