PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன் அறிக்கை: தெளிவான அரசியல், 
மக்களுக்கான அரசியல் செய்ய தெரியவில்லை என்றால், நடிகர் விஜய் இன்னும் பல 
படங்களில் நடிக்கலாம். அதை விடுத்து, உலகமே போற்றும், கங்கை கொண்ட சோழபுரம்
 விழாவை கொச்சைப்படுத்த நினைப்பது, ஜோசப் விஜய்க்கு அழகல்ல. நானும் ரவுடி 
தான் என்பதை போல், தன் இருப்பை காட்டி கொள்வதற்கு, விஜய் இப்படி எல்லாம் 
அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சோழர் வரலாறு குறித்தெல்லாம் 
விஜய்க்கு தெரியும்னு சீரியசாக கருதி, பதிலடி தர்றாரே... நியாயமா, 
விஜய்க்கு அறிக்கை எழுதி தந்தவரை தான் இவர் கண்டிச்சிருக்கணும்!
  இந்திய கம்யூ., கட்சி தேசிய பொதுச்செயலர் டி.ராஜா பேச்சு: கம்யூனிஸ்ட் கட்சியினர் சித்ரவதையை சந்திப்பர்; சிறை கொடுமையை அனுபவிப்பர். ஆனால், அவர்களின் லட்சியத்திற்கு தோல்வியே இல்லை. மாநில உரிமைகள், மாநில நலன்களை காப்பாற்ற, ஓரணியில் நின்று போராட வேண்டும். காசாவில் உணவு கிடைக்காமல், குழந்தைகள் இறக்கின்றனர். போர் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும்.
கடல் தாண்டி நடக்கிற காசா போர் பத்தி கவலைப்படுறாரே... உள்ளூர்ல எத்தனை மக்கள் பசி, பட்டினியா கிடக்கிறாங்க... அவங்களை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தாரா? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: மழையால், முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், 136 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்கிறது, 'ரூல்கர்வ்' நடைமுறை. அதற்கு மேல் வரும் தண்ணீரை கேரள பகுதிக்கு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதாலும், இங்கே ஆளும் தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி இருப்பதாலும், அதில் இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கின்றனரே தவிர, விவசாயிகள் குறித்த கவலை இல்லை.
தேர்தல் நெருக்கத்துல, கூட்டணி கட்சிகளின் மனம் நோகும்படி நடந்துக்கிட்டா, ஆளுங்கட்சிக்கு அல்லவா ஆபத்தா போயிடும்!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: பயனற்ற தொடர் தோல்விகளின் தலைமையான பழனிசாமி எனும் நம்பகத்தன்மையற்ற ஒருவருக்காக, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரோடு, அண்ணாமலை என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் அடித்தளத்தையே, அடுத்தடுத்து பா.ஜ., இழப்பது கடைந் தெடுத்த முட்டாள்தன மாகும்.
பா.ஜ.,வை பொறுத்தவரை, இரட்டை இலை சின்னம் எங்கிருக்கோ, அந்த பக்கம் தான் சாய்வாங்க... இதுல நண்பர், பகைவருக்கு எல்லாம் இடமே இல்லை!

