PUBLISHED ON : ஆக 04, 2025 12:00 AM

பொள்ளாச்சி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி:
யார், யாரை
போய் சந்தித்தாலும் அது எள்ளளவும் அ.தி.மு.க.,வை பாதிக்காது. எம்.ஜி.ஆர்.,
- ஜெயலலிதா மறைவுக்கு பின் எத்தனையோ பேர், கருணாநிதியிடம் ஐக்கியமாகினர்.
அ.தி.மு.க.,வில் இருந்து அமைச்சர் பதவியை அனுபவித்தவர்கள், தி.மு.க.,வில்
ஐக்கியமாகினர். அ.தி.மு.க.,வை விட்டுச் சென்று, இருந்த கட்சிக்கு துரோகம்
நினைத்தவர்கள் இருந்த இடமே தெரியாமல் போய் விட்டனர். அதெல்லாம் இல்லை...
பாரம்பரிய, தி.மு.க.,வினரை விட, எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆட்சிகளில்
அமைச்சர்களாக இருந்த ரகுபதி, முத்துசாமி, சாத்துார் ராமச்சந்திரன்,
ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி தான் இன்று, தி.மு.க.,வுல செல்வாக்கா
இருக்காங்க!
தமிழக, பா.ஜ., பொருளாளர், எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: இந்தியாவிலேயே துாய்மையான மாநிலத்திற்கான விருதை, உத்தர பிரதேசம் பெற்றுள்ளது. கடந்த, 2015ல், அகில இந்திய அளவில், இரண்டாவது துாய்மையான நகரமாக திருச்சி இடம் பெற்றிருந்தது. இப்போது, 112வது இடம் பெற்றுள்ளது. துாய்மை நகரத்தை கீழே தள்ளியது தான், தி.மு.க., ஆட்சியின் சாதனை.
'உ.பி.,யில், பா.ஜ., அரசு நடப்பதால் விருது தந்திருக்காங்க... நாங்க எதிர்க்கட்சி என்பதால், எங்களை கீழே தள்ளிட்டாங்க'ன்னு கூட, திமு.க.,வினர் சால்ஜாப்பு சொல்லுவாங்க!
சென்னை மாநகராட்சி, காங்., கவுன்சிலர் சிவராஜசேகரன் பேச்சு: தமிழக முதல்வரின் மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பஸ் பயணம், காலை சிற்றுண்டி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும், அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, பா.ஜ., ஆளும் மாநிலங்களும் காப்பியடிக்கின்றன. நாளை அமைய உள்ள, ராகுல் தலைமையிலான தேசிய மாடல் அரசின் முன்னோட்டமாக, தி.மு.க., அரசு, தேசிய மாடலாக உயர்ந்து நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
'திராவிட மாடல்' அரசுக்கு, 'தேசிய மாடல் அரசு' என்ற பதவி உயர்வை குடுக்கிறாரோ?
தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு: அ.தி.மு.க., -- பா.ஜ., என்பது இயற்கையான கூட்டணி. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரத்துக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது. இது, ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறியை காட்டுகிறது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் உறுதி. இயற்கையான இந்த கூட்டணி நிச்சயமாக வெல்லும். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு, மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரும்.
மத்திய அரசின் வாயிலாக, இப்பவே திட்டங்களை கொண்டு வந்துட்டு, மக்களை சந்தித்தால், இவங்க கூட்டணிக்கு ஆதரவு இன்னும் அதிகரிக்குமே!

