PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அறிக்கை:
'கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும்' என்ற அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையை வைகோவும், நானும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து எடுத்துரைத்தோம். வந்தே பாரத் ரயில் நின்று செல்ல போராட்டம் நடத்திய ஒரே கட்சி, ம.தி.மு.க., மட்டுமே. தற்போது, கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்வதை அறிந்து மனம் மகிழ்கிறேன். ஆதாயம் இல்லா என் மக்கள் பணி தொடரும்.
'இந்த விஷயத்தில், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை'ன்னு மறைமுகமா குத்தி காட்டுறாரோ?
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அறிக்கை:
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற நான்கு விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். மேலும், தமிழகம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த, 47 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் மற்றும் படகுகளை பாதுகாப்புடன் மீட்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முடியாத தொடர்கதையாக நீளும் இந்த சம்பவங்களுக்கு, உறுதியான மற்றும் இறுதியான தீர்வை மத்திய அரசு சீக்கிரமே எடுக்கணும்!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு:
தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களும், தற்போது ஆள்பவர்களும் பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்துகின்றனர். தமிழகத்தை தெருவுக்கு தெரு டாஸ்மாக் மற்றும் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை இடமாக மாற்றியது தான் ஆட்சியாளர்களின் சாதனையாக உள்ளது. ஆட்சியாளர்களை கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக, மக்களை போதையின் பிடியில் வைத்துள்ளனர்.
இப்படி, ரெண்டு கட்சிகளையும் போட்டு தாக்குறாங்களே... மூணாவது அணி கூட்டணிக்கு ஏதும் முயற்சி பண்றாங்களோ?
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி:
மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை; 2021 - 22, 2022 - 23ம் ஆண்டுகளுக்கான நிதியைத்தான் இப்போது ஒதுக்கி உள்ளது. ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியோடு, மாநில அரசு நிதியை சேர்த்து கொடுத்துள்ளது. மத்திய அரசு முறையாக ஒதுக்கியிருந்தால் சராசரியாக, 60,000 மாணவர்கள் பயனடைந்திருப்பர். இனியாவது, மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல், கல்விக்கான நிதியை காலதாமதமின்றி, நிபந்தனையின்றி வழங்க வேண்டும்.
அதானே... 'அரசு பள்ளிகளை வரிசையா மூடிக்கிட்டே வர்றது தான் இவங்க சாதனையா...'ன்னு யாரும் கேட்டுறக் கூடாது பாருங்க!