PUBLISHED ON : ஆக 05, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'முதுநிலை மருத்துவ
படிப்புகளில், ஓ.பி.சி., வகுப்பினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு பெற்றது
தி.மு.க.,வின் சாதனை' என, ராஜ்ய சபா எம்.பி., வில்சன் சொல்வது வேடிக்கை யாக
இருக்கிறது. மேற்படிப்புகளில், ஓ.பி.சி., இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என,
உச்ச நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்ததே அ.தி.மு.க., தான்.
அதன்பிறகே, பா.ம.க., - தி.மு.க., மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அந்த
வழக்கில் இணைந்து கொண்டன. எனவே, இதை சாதித்த பெருமை, அ.தி.மு.க.,வையே
சேரும். இதே பாதகமா தீர்ப்பு வந்திருந்தால், தி.மு.க., மட்டுமல்ல; இவரும்
அமைதியாகவே இருந்திருப்பாரு!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: மதம் கேட்டு, நெற்றி பொட்டில் சுட்டு கொன்றவர்களுக்கு, ' ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக மரண அடி கொடுத்திருக்கிறது, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய ராணுவம். இந்த வெற்றியை தேச பக்தர்கள் கொண்டாடும் வேளையில், பாகிஸ்தானுக்கு பரிந்து பேசி , இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தி, இந்தியாவின் இறையாண்மைக்கு வழக்கம் போல பங்கம் விளை விக்கிறார் ராகுல்.
ராகுல் பேசுவதை அவரது கட்சியினரே சீரியசா எடுத்துக்க மாட்டேங்குறாங்க... இவர் ஏன் இவ்வளவு அலட்டிக்கிறாரு?
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சின்னாறு கிராமத்தின் பழங்குடி யினத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை, விசாரணை என்ற பெயரில் வனத்துறையினர் அழைத்துச் சென்று அடித்ததில், வனச்சரக அலுவலகத்திலேயே அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் தற்கொலை செய்ததாக வனத்துறையினர் தெரிவித்திருப்பது நம்பும்படி இல்லை. வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்.
'நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தை மா.கம்யூ., கையில் எடுக்கும்' என்ற எச்சரிக்கை வாசகத்தை மறந்துட்டாரே!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் மாசிலாமணி அறிக்கை: ரசாயன உரத்திற்கான மானியத்துக்கு, கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பெருமைப்பட்டுள்ளார். ஆனால், ஒவ்வொரு பருவத்திலும் ரசாயன உரங்கள் கிடைக்கவில்லை என, விவசாயிகள் போராடி வருகின்றனர். அப்படி யென்றால், அந்த உரங்கள் எங்கே போகிறது என்பது தான் எங்கள் கேள்வி.
இயற் கை உரங்களுக்கு விவசாயிகள் மாறட்டும் என கருதி, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குறாங் களோ?