PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM

தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி: 'தி.மு.க.,
கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்க்கப்படலாம்' என, தலைவர் ஸ்டாலினே சொல்லி
விட்டார். அவை, எந்தெந்த கட்சிகள் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.
எங்கள் கூட்டணியில், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,
தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா ஆகியோரை சேர்ப்பது பற்றியும் ஸ்டாலின்
தான் முடிவு செய்வார். புதுசா வர்றவங்களை சேர்த்துட்டு, பழைய
கட்சிகளுக்கு, 'கல்தா' கொடுத்துட மாட்டீங்களே?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தமிழகத்தில், வடமாநிலத்தவருக்கு ஓட்டுரிமை வழங்கினால் அவர்கள் தான் மாநில அரசியலை தீர்மானிப்பர் . வடமாநிலத்தவர் அனைவரும் பா.ஜ., வாக்காளர்கள். சென்னையில் சவுகார்பேட்டை, ஈரோட்டில் பெருந்துறை ஆகியவை, தமிழர்கள் இல்லாத பகுதிகளாக மாறிவிட்டன. 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டமே அதற்காகத்தான். உழைக்கிறான் என்பதற்காக, ரேஷன் கார்டு வழங்கினீர்கள் சரி... தேர்தல் என்றால், அவர்கள் ஊருக்கு சென்று தானே ஓட்டு போட வேண்டும்!
என்னமோ, 2026 சட்டசபை தேர்தலில் இவர் ஜெயித்து ஆட்சிக்கு வர போவது மாதிரியும், வடமாநில வாக்காளர்களால் அதுக்கு ஆபத்து என்பது போலவும் பேசுறாரே!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேட்டி: சேலத்தில் கிட்னி திருட்டு நடந்து, விசைத்தறி தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'இது கிட்னி திருட்டு அல்ல; முறைகேடு' என்று விளக்கம் கொடுத்துள்ளார். அது எதுவாக இருந்தாலும், தடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.
அதானே, நாளைக்கே செயின் பறிப்பை கூட, 'வழிப்பறி அல்ல; தட்டி பறித்தார்'னு சொன்னாலும் சொல்லிடுவாங்க!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: பழம்பெருமை வாய்ந்த ஆறுகள், தற்போது கழிவுநீரால் சூழப்பட்டு, பரிதாபமாக காட்சியளிக்கின்றன. எனவே, கேட்பாரற்று கிடக்கும் நம் நதிகள், நீர்நிலைகளை காக்க, 'நீர்வளம் காப்போம்' என்ற பிரசாரத்தை பா.ஜ., முன்னெடுக்க இருக்கிறது. இதன்படி, தமிழகம் முழுதும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள், மரங்கள் நடுவது, நீர்நிலை களை காக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் போன்றவை நடக்க இருக்கின்றன. தமிழ கம் முழுதும் உள்ள பா.ஜ., சொந்தங்கள் அனைவரும் இந்த பிரசாரத்தில் பங்கேற்பதோடு , மக்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.
வெறும் அறிக்கையுடன் நின்று விடாமல், களத்திலும் இறங்கி காரியம் ஆற்றினால் பாராட்டலாம்!