PUBLISHED ON : ஆக 08, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி:
ஒருவர் நேர்காணலுக்கு வரும்போது, அவரது நேர்காணலை வைத்து என்ன பதில்கள்,
கருத்துகளை சொல்கிறார் என்ற அடிப்படையில் தான் தேர்வு செய்வர். அந்த
வகையில் சினிமா புகழ் உள்ள விஜய்க்கு, எங்களை காட்டிலும் விளம்பர வெளிச்சம்
உள்ளதாக சொல்கின்றனர்; அதில் தவறில்லை. ஆனால், அவர் எந்த தத்துவத்தை
வைத்து, என்ன போராட்டத்தை முன்னின்று நடத்து கிறார் என்பதை வைத்து தான்
அவரது அரசியல் எதிர்காலம் அமையும். தத்துவம், போராட்டம் எல்லாம் விஜய்
படங்கள்ல மட்டும் தான் இருக்கும்... அவரது கட்சியிடம் அதை எல்லாம்
எதிர்பார்க்க முடியாது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கர்நாடகாவில் பட்டியலின சமூகங்களுக்கு, உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக, அம்மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கர்நாடக அரசு அமைத்தது. ஆணையமும் அதன் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. சமூக நீதிக்கு மேலும் மேலும் துரோகம் செய்யாமல், வன் னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கினால், மற்ற சமூகங்களும் எதிர்பார்க்குமே... அதை அரசால் சமாளிக்க முடியுமா?
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேச்சு: இந்தியாவிலேயே இன்று, உயர் கல்வியில் பெண்கள் அதிகம் படிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்களை கொண்டு வந்ததோடு, அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவ - மாணவியருக்கு, மருத்துவ படிப்பில் சேர, 7.50 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்து, அதன் மூலம் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை இந்த அரசு அதிகரித்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.50 சதவீதம் இட ஒதுக்கீடு தந்தது, பழனிசாமியின் அ.தி.மு.க., ஆட்சி அல்லவா... அதுக்கு இவர் ஸ்டிக்கர் ஒட்டுறாரே!
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் முத்தரசன் பேட்டி :
இந்திய கம்யூ., கட்சியின், 26வது மாநில மாநாடு, வரும், 15 முதல், 18ம் தேதி வரை சேலத்தில் நடக்க உள்ளது. 16ம் தேதி முதல்வர் ஸ்டாலினும், நிறைவு நாளில் கட்சியின் தேசிய செயலர் ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதில், பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.
பெரிய பெரிய கட்சிகளே ஒரு நாள் மாநாட்டோடு முடிச்சுக்கிறப்ப, இவங்க நாலு நாள் மாநாடு நடத்தி என்னத்த சாதிக்கப் போறாங்கன்னு தான் தெரியலை!