PUBLISHED ON : ஆக 13, 2025 12:00 AM

அகில இந்திய காங்., செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன் பேச்சு:
தெலுங்கானா மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீதக்காவை, அவரது இல்லத்தில் சந்தித்தேன். ரக் ஷா பந்தன் தினத்தை ஒட்டி ராக்கி அணிவித்து, சகோதரர் தின வாழ்த்து தெரிவித்தார். ஒரு காலத்தில் பழங்குடியின மக்களின் விடுதலைக்காக போராடிய மாவோயிஸ்ட் குழுவில் இருந்தார். இன்று தன்னை சார்ந்த சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், தெலுங்கானா மக்கள் அனைவரின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டு வருகிறார்.
அவங்க நக்சலா இருந்து ஜனநாயக பாதைக்கு திரும்பியி ருக் காங்க... நம்ம ஊர்ல சிலர் ஜனநாயகம் என்ற போர்வையில், நக்சல்கள் மாதிரியே பேசுறாங்களே!
முதல்வர் ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா கடிதம்:
என் மீது வைகோ சுமத்திய துரோகி பழிச்சொல்லுக்கு நீதி கேட்டு நான் இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான அப்துல் காதர், பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். அவர் என்னை ஆதரித்த ஒரே காரணத்திற்காக, 'நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அப்துல் காதரை எந்த நிகழ்ச்சியிலும் பேச விடமாட்டோம்' என மிரட்டி, வேலுார் மாவட்ட ம.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்துல் காதர் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவங்க உட்கட்சி பஞ்சாயத்து, அப்துல் காதர் பட்டிமன்ற நடுவர் பணிக்கு வேட்டு வச்சிடும் போலிருக்கே!
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேட்டி:
தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை மட்டும் தான் ஒரு அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றில்லை... போராடக்கூடிய தொழிலாளர் களின் கோரிக்கைகளில், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு என்ற முறையில், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அப்பப்ப இந்த மாதிரி குரல் மட்டும் கொடுத்து, 'தொழிலாளர்களின் தோழன்' என்பதை நிரூபிக்கிறாரோ?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலினின் புதிய கல்வி கொள்கை, கமல் பேச்சுக்கு விளக்க உரை எழுதிய மாதிரி இருக்கிறது. வார்த்தை பிரயோகங்கள், சாமானிய மனிதனுக்கு புரிகிற மாதிரி இல்லை. குழவி பருவம், கூர் சிந்தனை திறன், நிதி சார் கல்வி அறிவு என, தமிழ் பேராசிரியர் களுக்கு மட்டும் தெரிந்த வார்த்தைகளே உள்ளன. முழுக்க முழுக்க வார்த்தை ஜாலங்களில் கல்வி கொள்கை செல்கிறது.
வார்த்தை ஜாலம் காட்டியே ஆட்சியை பிடிச்சவங்க தயாரித்த கல்வி கொள்கையிலும் அது தானே இருக்கும்!