PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: ஹிந்து மக்கள்
கட்சி சார்பில், 'வெல்லும் ஆன்மிக தமிழகம்' எனும் பிரசார யாத்திரை கடந்த
மாதம், 13ல் திருத்தணியில் துவங்கியது. தேர்தலில், ஹிந்து மக்கள் நுாறு
சதவீதம் ஓட்டளிக்க வேண்டும், ஹிந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும்,
ஹிந்து விரோத தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் யாத்திரையின்
நோக்கம். இந்த யாத்திரைக்கு, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தடை
விதிக்கின்றனர். இவங்க சும்மா யாத்திரை நடத்தினாலே அனுமதி கிடைக்காது...
'தி.மு.க., ஆட்சியை அகற்றும் யாத்திரை'ன்னு சொன்னா, எப்படி அனுமதி
தருவாங்க?
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ராமச்சந்திரன் அறிக்கை: 'தமிழகத்தில் கஞ்சா வளர்க்கப்படவில்லை. சாராயம் உற்பத்தி செய்யப்படவில்லை. இவை எல்லாம், வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வருகிறது. இதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு' என்று, கனிமவள துறை அமைச்சர் ரகுபதி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. இதை தடுக்க, மாவட்ட அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
அதையும் கூட, 'வெளிமாநிலத்தினர் வந்து தான் விற்கிறாங்க... அவங்களை மத்திய அரசு தடுக்கலை'ன்னு சொன்னாலும் சொல்லுவார்!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தினகரனுடன் பேசி கொண்டிருக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. ஒரே மேடையில் தலைவர்கள் விரைவில் பேசுவர் முறையான ஏற்பாடுகள் முடிந்த பின், கூட்டணி கட்சிகளின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கிறாரே... அவருக்கு தே.ஜ., கூட்டணியில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்துறாரோ?
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் அறிக்கை: தேர்தல் ஆணையம், நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான். அதற்கு, நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு உள்ளது. மாறாக, கேள்வி கேட்பதற்கு அது நீதிமன்றம் அல்ல; தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கும் இந்த நாட்டின் வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது.
வாஸ்தவம் தான்... ஆனா, தேர்தல் ஆணையம் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிட்டு, அதன் அதிகாரிகள் ஆதாரங்களை கேட்டால் மட்டும் தராமல் மவுனம் சாதிப்பது ஏன்?