PUBLISHED ON : ஆக 18, 2025 12:00 AM

தமிழக, பா.ஜ., சமூக ஊடக பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
ஸ்ரீராகவேந்திரர் அருள் பரிபூரணமாக பெற்றிருக்கும் உச்ச நாயகன் ரஜினியின்,
50வது ஆண்டு திரையுலக வெற்றியை, உலகம் போற்றும். சிகர உச்சியில்
வெற்றிக்கொடி ஏற்றுவதும், அங்கே நிலைத்து நிற்பதும் சராசரி மனிதனுக்கு
சாத்தியம் இல்லை. காலத்தை உயிராக எண்ணியதால், உழைப்பை மூச்சாக
சுவாசித்ததால், உண்மையை உளமாற நேசித்ததால் தான் வெற்றி தொடர்கதையாய் அமைந்
தது; அவரது வெற்றி இன்னும் தொடர வேண்டும் .
ரஜினிக்கு பின்னாடி வந்த எத்தனையோ பேர் காணாம போயிட்டாலும், அவர் இன்றும் நிலைச்சு நிற்பது பெரிய சாதனை தான்!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேச்சு:
தேச நலன், மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மையை வென்றெடுக்க அயராது ஒன்றுபட்டு போராடுவோம். மத்திய, மாநில அரசுகளின் உழைப்பு சுரண்டலுக்கு முடிவு கட்டி, எல்லாருக்கும் எல்லாம் என்ற சோசியலிஷ சமுதாயத்தை படைக்க உறுதியேற்போம்.
மத்திய அரசை திட்டுற சாக்குல, மாநில அரசும் உழைப்பு சுரண்டல்ல ஈடுபடுதுன்னு ஊசியை செருகிட்டாரே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட கூட முடியவில்லை. மக்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஆட்சியாளர்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை உலகை சுற்றி வந்து உற்சாகத்தில் திளைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிகழ்ந்ததை விட அதிகமான சுரண்டல்களும், அத்துமீறல்களும் இப்போது தான் அரங்கேறுகின்றன.
அன்று, ஆங்கிலேயர்கள் இருந்த இடத்தில், இன்று நம்ம ஊர் அரசியல்வாதிகள் இருக்காங்க என்பதில் மாற்று கருத்தே இல்லை!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு:
நானும், விஜயகாந்தும் சுற்றுப்பயணம் சென்றபோது, பொதுமக்கள் வீட்டு வேலைகளை விட்டு, ரேஷன் கடைகளில் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றதை பார்த்தோம். இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என யோசித்த விஜயகாந்த், 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுக்க வேண்டும்' என கூறினார். டில்லி மற்றும் வட மாநிலங்களில் வீடுகள்தோறும் ரேஷன் பொருட்கள் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில், தாமதமாக தான் இந்த திட்டத்தை, இப்போது செயல்படுத்தியுள்ளனர்.
இவங்க கட்சியை கூட்டணியில் சேர்த்துட்டா, தி.மு.க.,வின் இந்த தாமதத்தை மறந்துடுவாங்க... இல்லேன்னா, இதை வச்சே வசைபாடி ஒருவழி பண்ணிடுவாங்க!