PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு: ஆர்.எஸ்.எஸ்., -
பா.ஜ., திட்டமிட்டு, தமிழர் களின் வாழ்வுரிமையை பறிக்க நினைக்கின்றன.
பாசிச சக்திகளுக்கு எதிராக, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். திராவிட
கொள்கை கொண்ட அ.தி.மு.க.,வை பா.ஜ., கட்டுப்படுத்தி விட்டது. அதனால்,
தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எதுவும், மக்கள் விரோத பா.ஜ.,வுடன்
சேர மாட்டோம். 'அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்பது போல,
அமலாக்கத் துறை நினைத்தால், தி.மு.க.,வையும் கட்டுப்படுத்திடும்!
தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் பேட்டி: தமிழகத்தில் நடக்கும் ஆணவ கொலைகளை கண்டிக்கிறோம். இதை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் நான் போட்டியிடுகிறேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சட்டசபை தேர்த லுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கின்றன. எங்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும்.
என்னமோ, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து மாறி மாறி துாது வருவது போல, 'பில்டப்' கொடுக்கிறாரே!
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈஸ்வரன் பேச்சு: கடந்த 10 ஆண்டுகளில், நாட்டை வளர்ச்சியடைய செய்து விட்டதாக பா.ஜ.,வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ஜவுளி தொழில் எங்கே வளர்ச்சி பெற்றுள்ளது. தவறான பொருளாதார கொள்கையால், திருப்பூரில் புது ஜவுளி நிறுவனங்கள் உருவாகவில்லை; விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதனால், வேலைவாய்ப்புகளும் பெருகவில்லை.
அரசியலுக்காக புகார் சொல்ல கூடாது... திருப்பூர் ரயில் நிலையத்தில் தினமும் வந்திறங்கும் நுாற்றுக்கணக்கான வடமாநிலத்தினரே, ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு சாட்சி! மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேச்சு: மத்திய அரசு, மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக நாட்டை மாற்ற முயற்சித்து வருகிறது. அதற்காக, பா.ஜ., ஆளாத மாநிலங்களில், மாநில உரிமை பறிப்பு, நிதி ஒதுக்குவதில் பாரபட்சம், வரி பங்கீட்டில் முரண்பாடு, கவர்னர் மூலம் குடைச்சல் என, பல்வேறு வழிகளில் இடையூறு செய்து வருகிறது. பா.ஜ., ஆட்சியை வீழ்த்த, கம்யூ., கட்சி எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
அது சரி... நுாற்றாண்டுகளை கடந்த காங்., கட்சியே தலையால தண்ணீர் குடிச்சும், தொடர்ந்து, மூன்று தேர்தல்கள்ல பா.ஜ., ஆட்சியை அகற்ற முடியலை... விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் கம்யூ.,க்களால மட்டும் முடியுமா என்ன?