PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: பிரதமர் மோடியுடன்,
ரஷ்ய அதிபர், சீன அதிபர் இணைந்து, எஸ்.சி.ஓ., மாநாட்டில் தோளோடு தோள் நின்ற
காட்சி, உலக அரங்கில் அவருக்கு இருக்கும் ஈடு இணையற்ற, உலகளாவிய
செல்வாக்கிற்கு ஒரு சான்று. இதன் வழியே, உலகளாவிய கூட்டணிகளை மாற்றி
அமைப்பதில், அவர் முக்கிய தலைவராகிறார். அவரது ராஜதந்திரங்கள், மேற்கு
உலகின் ஆதிக்கத்தை பலவீனப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வலிமையான கூட்டணியை
உருவாக்கு வதிலும், மோடியின் ராஜதந்திரங்கள் பலிக்குமா என பார்ப்போம்!
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் பேட்டி: தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின், 2017ல் முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி, நான்காண்டுகள், இரண்டு மாதங்கள் சிறப்பான ஆட்சியை நடத்தினார். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் விழிப்போடு செயல்பட்டு, தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
தி.மு.க.,வுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து, பழனிசாமி ராஜதந்திரத்துடன் செயல் பட்டால் தான், இவரது எண்ணம் ஈடேறும்!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு: தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய தகுதி இல்லாத அரசாக, இன்றைய தி.மு.க., அரசு இருக்கிறது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு அடித்தளமாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., தலைமையில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வெற்றியை உறுதிசெய்ய வேண்டும்.
எங்க...? பன்னீர்செல்வம், தினகரன்னு பலரும் கழன்று ஓடிட்டாங்களே... இவர் மட்டும் தான் அந்த கூட்டணியில் எஞ்சியிருக்காரு!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: 'ஒரே ஒரு ஊரு இல்ல... ஒரு வீட்டைக்கூட தர முடியாது' என்று, அகங்காரம் பிடித்து ஆடிய கவுரவர்களை போல், பழனிசாமி அழிய போகிறார். ஆனால், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன்' என்கிற விஜயோ, பாண்டவர்களை போல் உயர்ந்து, அ.தி.மு.க., இடத்தை தன்வசப்படுத்தி, இரண்டாம் இடத்திற்கு உயர போகிறார்.
இரண்டாம் இடத்துக்கு உயரும் விஜயால, எப்படி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தர முடியும்?