PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி:
அ.தி.மு.க.,வை ஒன்றிணைப்பதற்கு செங்கோட்டையன் எடுத்து வரும் முயற்சி
பாராட்டக் கூடியது. அ.தி.மு.க., என்பது ஈ.வெ.ரா., பாசறையில் உருவான இயக்கம்
என்பதால், அதன் மீது மதிப்பும், மரியாதையும் உண்டு. பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,
பிடியில் அ.தி.மு.க., இயக்கம் சிக்கி சீரழிந்து விடக்கூடாது.
தி.மு.க.,வுடன் மனக்கசப்பு ஏற்பட்டால், எதிர்காலத் தில் கூட்டணி சேர, அ.தி.மு.க.,வும் வலிமையா இருக்கணும் என்று நினைக்கிறாரோ?
மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேட்டி:
'ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இல்லை என்றால், பதவியில் இருந்து ஓய்வு பெற்று விடலாம்' என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தமிழக அரசு போல, புதுச்சேரி அரசும் தகுதி தேர்வு எழுதாத அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்கி, அவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்.
எது எப்படியோ...? மாணவர்கள் நலனில் எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை என்பது அப்பட்டமா தெரியுது!
கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை:
ஜி.எஸ்.டி., வரிகள், 5, 18 என, இரு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் வரி குறைத்தது இதுவே முதல் முறை. அத்தியாவசிய பொருட்கள், நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்க ளுக்கு அதிக வரி குறைப்பு செய்துள்ளனர். இதனால், சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயனடைவர். வரி குறைப்பு புரட்சிகரமான, வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. மக்கள் அதிக பொருட்களை வாங்குவர்; வணிகம் அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
அமெரிக்காவின் அதீத வரி விதிப்பால் அவதிப்பட்ட நம் வர்த்தகர்களுக்கு, இது ஆறுதல் அளித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை!
திருச்சி தொகுதி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி:
செப்., 15ல், அண்ணாதுரை பிறந்த நாளின் போது, திருச்சி சிறுகனுாரில் ம.தி.மு.க., மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, ம.தி.மு.க., மீண்டும் வந்துவிட்டது, மறுக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்கிறது என்பதை, இந்த மாநாடு உணர்த்தும்.
மதுரையில், விஜய் மாநாட்டுக்கு திரண்ட கூட்டத்தை விட பெரிய கூட்டத்தை திரட்டி காட்ட போறாரோ?