PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

நடிகர் ரஞ்சித் பேட்டி: ஆளும் கட்சியை விமர்சனம் செய்தால் தான் அரசியல்
செய்ய முடியும். ஆட்சியாளர்களை குறை கூறுவது அனைவரும் செய்வதுதான். நடிகர்
விஜயும் அதையே செய்கிறார்; வேறொன்றும் புதிதாக இல்லை. வாக்குறுதி களை
நிறைவேற்றாத ஆட்சியாளர்களை, சிறையில் அடைக்கும் சட்டம் வர வேண்டும். அப்படி
வந்தால், நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அரசியல் கட்சிகள்
முன்வைக்கும். இவர் சொல்ற மாதிரி அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துட்டா,
நாட்டுல இருக்கும் முக்கால்வாசி அரசியல்வாதிகள் ஜெயில்ல தான் இருப்பாங்க!
தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி. துரைசாமி பேட்டி: மக்கள் வரிப்பணத்தில் அரசு விழாக்களுக்கு மேடை அமைத்து, பா.ஜ.,வை குறை கூறுவதையே, தி.மு.க., அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை திட்டத்தில், கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, தகுதி வாய்ந்த விவசாயிகளையும் தி.மு.க., அரசு நீக்கிஉள்ளது.
நீக்கப்பட்ட விவசாயிகள், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டு போட்டா, சேதாரம் அவங்களுக்கு தானே... அதனால, இவர் கவலைப்படாம இருக்கலாம்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: இந்த ஆண்டு வெளியான உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில், தமிழக அரசின் பல்கலை, கல்லுாரிகள், முந்தைய ஆண்டு களை விட பின்தங்கியுள்ளன . அதே சமயம், தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் பல்கலை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், முதன்மை இடங்களை பிடித்துள்ளன என்ற தகவல் ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இருந்தாலும், மாநில அரசு பல்கலை மற்றும் கல்லுாரிகளில், கூடுதல் கவனம் தேவை என்பதையே இது உணர்த்துகிறது.
'உயர்கல்வியில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்'னு துறையின் அமைச்சர் கோவி.செழியன் அடிக்கடி சொல்றது தப்புன்னு நிரூபணம் ஆகிடுச்சே!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தி.மு.க.,வில் சேர்ந்துள்ள மருது அழகுராஜ் அறிக்கை: சண்டை காட்சிகளில், சண்டை போடுவது போல் நடிப்பது, பாடல் காட்சிகளில் தானே பாடுவது போல் வாயை அசைப்பது, இப்படி உண்மை இல்லாத ஒன்றை, உண்மை போல் பிம்பப்படுத்தி, பெருவெற்றி காணும் திரை பிரபலங்கள், அரசியலிலும் தன்னிடம் இல்லாத தலைமை பண்பை இருப்பது போல் காட்டி ஜெயித்து விடலாம் என நினைத்து விடக்கூடாது.
வாஸ்தவம் தான்... தலைமை பண்பு என்பது, தானாக வருவது... அதை எந்த இயக்குநரும், கதாசிரியரும் கற்று கொடுத்து விட முடியாது!