PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM

நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா பேச்சு: கல்வி தான்
அனைவரையும் உயர்த்தும். எம்.பி.,யாக, மத்திய அமைச்சராக இருந்திருக்கிறேன்
என்றால், அது நான் படித்த கல்வியால் தான். அருள்கூர்ந்து உங்கள் பிள்ளைகளை
படிக்க வையுங்கள். கல்வியும், அதிகாரமும் தான் உங்கள் குழந்தைகளை
காப்பாற்றும். ஒரு காலத்தில் அறிவு மட்டும் தான், இந்த உலகத்தை ஆட்சி
செய்யும். அதை நோக்கி உங்கள் பயணத்தை வைத்துக் கொள்ளுங்கள். மக்கள்
நலத்திட்டங்களை பைசா கூட முறைகேடு இல்லாம செயல்படுத்திய காமராஜர் எந்த
கல்லுாரியில் படிச்சாரு...? நன்கு படித்த அரசியல்வாதிகள் தான் ஊழல்
பண்ணிட்டு, 'உள்ளே' போறாங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: தமிழகத்தில், 100 கிலோ கொண்ட, 1 குவின்டால் நெல்லுக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை கொடுப்பதாக தமிழக அரசு பொய் சொல்லி வருகிறது. மத்திய அரசு, 2,369 ரூபாய் கொடுக்கிறது. தி.மு.க., அரசு, ஊக்கத்தொகை என 131 ரூபாய் தான் கொடுக்கிறது. ஒடிஷாவில் 800 ரூபாயும், ஆந்திராவில் 500 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன. தி.மு.க.,வுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், மத்திய அரசு வழங்கும் தொகையுடன், 1,000 ரூபாய் கொடுத்து இருந்தால் நாங்கள் பாராட்டுவோம்.
இப்படித்தான் மத்திய அரசின் எல்லா திட்டங்களிலும், மாநில அரசின் ஸ்டிக்கர்களை ஒட்டிட்டு இருக்காங்க!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் தேர்தலை சந்திக்கிறது. இன்னும் சில மாதங்களில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும். இந்த கூட்டணியை வளப்படுத்துவதற்கும், பிரகாசமான வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும், தமிழகம் முழுதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவர் பிரசாரத்தில் இறங்கியதும், விஜய் பிரசாரம் எல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாமல் போயிடுமோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 'தாமிரம், டைட்டா னியம், பாஸ்பரஸ், பொட்டாஷ், சிலிக்கான் போன்ற, 30 வகையான கனிம சுரங்கங்கள் அமைக்க, மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த தேவையில்லை' என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி தான் சுரங்கம் அமைக்க முடியும். அப்படி இருக்கும்போது, மக்கள் கருத்துகளை கேட்காமல் சுரங்க திட்டத்தை செயல்படுத்துவது, மக்களின் நில உரிமை, ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்.
மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் தான், தி.மு.க., கூட்டணியில் இடம் பிடிக்க முடியும்னு டாக்டர் கணக்கு போடுறாரோ?