PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

அ.தி.மு.க., அமைப்பு செயலர் ராயபுரம் மனோ அறிக்கை:
'தமிழகத்தை தலைகுனிய
விடமாட்டேன்' என, முதல்வர் ஸ்டாலின் முழக்கம் இடுவது வேடிக்கை யாக
இருக்கிறது. சென்னை துறைமுகம் தொகுதி யில், வடமாநில நபர்களுக்கு சொந்தமான
நிலத்தை, ஒரு நில அபகரிப்பு கும்பல், ஆளுங்கட்சியினர், போலீஸ் மற்றும்
மாநகராட்சி அதிகாரிகள் துணையோடு அத்துமீறி ஆக்கிரமித்து உள்ளது. சமூக
விரோதிகளுக்கு பாதுகாப்பு அரணாக ஆளுங்கட்சியினர் செயல்பட்டு, தங்களுடைய
கஜானாவை வளப்படுத்தி கொள்கின்றனர். இது மக்கள் ஆட்சி அல்ல; மக்கள் விரோத
ஆட்சி.
'பானிபூரி விற்கிறவங்க'ன்னு வடமாநிலத்தவர்களை தி.மு.க., 'மாஜி'
அமைச்சர் பொன்முடி கிண்டல் செய்தது போல, 'அடுத்தவங்க சொத்தை
அபகரிப்பவர்கள்'னு தமிழர்களை அவங்க திட்ட மாட்டாங்களா?
அகில இந்திய இளைஞர் காங்., செயலர் லெனின் பிரசாத் பேட்டி:
நல்லதோ, கெட்டதோ சசிகலாவிற்கும், தினகரனுக்கும், பன்னீர்செல்வத்திற்கும் பழனிசாமி விசுவாசமாக இருக்கவில்லை. விசுவாசத்தை பற்றியும், கொள்கை பற்றியும் பேச பழனிசாமிக்கு அருகதை இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பழனிசாமி இழக்க போகிறார். எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவரது கட்சியின் பல தலைவர்கள், 'ஆட்சியில் பங்கு வாங்கி, ஆளும் வரிசையில் அமரணும்'னு சொல்றாங்க... இவரோ, எதிர் வரிசைக்கு துண்டு போடுறாரே!
தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு:
தமிழகத்திற்கு பல்வேறு துரோகங்களை தொடர்ந்து செய்து வரும் மத்தியில் ஆளும் பா.ஜ.,வோடுதான் பழனிசாமி கைகோர்த்து வலம் வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தற்போது அ.தி.மு.க., அலுவலகத்தை டில்லிக்கு பழனிசாமி மா ற்றி விட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லம் தான், அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகமாக மாறி உள்ளது.
தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கும் தமிழக காங்., கட்சியை, 'அடிமை' என, பா.ஜ.,வினர் விமர்சிப்பது, இவங்க காதுக்கு வரலையா?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு:
இந்தியா முழுதும் மத்திய அரசின் நிதியில் இயங்கும், 661 நவோதயா பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளியை கூட தமிழக அரசு அனுமதிக்கவில்லை. அதே நேரம், தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில், மும்மொழி கொள்கையும் உண்டு; நான்கு மொழி கொள்கையும் உண்டு.
நவோதயா பள்ளிகளை அனுமதித் தால், தி.மு.க., நிர்வாகிகளின் பள்ளிகள் காற்று வாங்க ஆரம்பிச்சிடுமே!